Monday, 2 June 2008

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் இருவர் சுட்டுக்கொலை: காத்தான்குடியில் ஹர்த்தால்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரும், களுதாவளை பிரதேச சபையின் உபதலைவரும், அவருடைய உதவியாளர் ஒருவரும் இன்று திங்கட்கிழமை இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

காத்தான்குடிப் பகுதியில் தோன்றியிருக்கும் பதற்றநிலையை தணிப்பது தொடர்பாக கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் பிள்ளையான், மாகாணசபை அமைச்சர் ஹிஸ்புல்லாவை முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள சூழ்நிலையில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் களுதாவளை பிரதேச சபை உபதலைவரும், அவருடைய உதவியாளரும் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு கல்லடியில் காத்தான்குடிப் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் வியாபாரி ஒருவர் நேற்று வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார். இவருடைய ஜனாசா இன்று திங்கட்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது. இதன்போது ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு பிரதேச மக்கள் முயற்சித்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் அமீர் அலி காத்தான்குடிப் பகுதிக்குச் சென்றதாகவும், அவரை அங்கு கூடியிருந்த மக்கள் கடுமையாக விமர்சித்ததாகவும் பிராந்தியச் செய்திகள் கூறுகின்றன. இதனைத் தொடர்ந்து அமைச்சர் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளார்.

அத்துடன், காத்தான்குடிப் பகுதியில் தொடர்ந்தும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுவருகிறது. வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டு, வீதிகள் வெறிச்சோடிப்போயிருப்பதாகத் தெரியவருகிறது. வீதிகளில் பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக காத்தான்குடிப் பகுதியிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுஇவ்விதமிருக்க தொடர்ந்தும் பதற்றநிலை காணப்படுவதால் ஏறாவூர் பிரதேச மக்களை அங்கிருந்து வெளியேறவேண்டாமென பாதுகாப்புப் தரப்பினர் அறிவித்துள்ளனர்.

No comments: