Thursday, 14 August 2008

ஒலிம்பிக் போட்டியில் 6 இலங்கையரே பங்கேற்பு ஆரம்ப வைபவத்திற்கு 35 பேர் பயணம்

சீனாவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையிலிருந்து ஆறு வீரர்களே கலந்து கொள்வதாக தெரிவித்திருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஒலிம்பிக் ஆரம்ப வைபவத்தில் பங்கேற்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 35 பேர்களுடன் பீஜிங் சென்றதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ள நிலையில் ஜனாதிபதியும் அவரது அரசும் கோடிக்கணக்கான பணத்தை வீண்விரயம் செய்து வருவதாகவும் எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சிப் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மேற்கண்ட தகவல்களை வெளியிட்டார்.

அவர் தொடர்ந்து விளக்கமளிக்கையில் கூறியதாவது;

நாடு இன்று சர்வாதிகாரத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. ஒரு குடும்பம் காட்டுதர்பார் நடத்துகிறது. பாராளுமன்றம் அவமதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர் கொள்கின்றனர். அரசுக்கு பக்கவாத்தியம் வாசிப்பவர்களைக் காட்டி நாட்டையும், உலகையும் அரசு ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது.

பொருளாதார வீழ்ச்சி, பணவீக்கம் காரணமாக நாடு பாதாளத்தில் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதற்கு முடிவு கட்டத்தவறினால் நாட்டின் எதிர்காலம் இருள் சூழ்ந்ததாகிவிடும்.

நாடு பொருளாதார ரீதியில் இந்தளவு மோசமடைந்திருக்கும் நிலையிலும் ஜனாதிபதியும், அரசும் மேற்கொள்ளும் வீண்விரயம் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது.

ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு இலங்கை வீரர்கள் ஆறு பேர் மட்டுமே சென்றுள்ளனர். ஆனால், ஒலிம்பிக் ஆரம்ப நிகழ்வில் பங்கேற்க ஜனாதிபதியுடன் மொத்தம் 35 பேர் சென்றனர். இவர்களுக்கான பயணச் செலவு யாருடைய பணம். நாட்டு மக்களின் பணத்தைக் கண் மூடித்தனமாக செலவிட்டு களியாட்டம் பார்க்கப் போகின்றனர்.

சார்க் மாநாட்டை நடத்தி 300 கோடி ரூபாவை கரைத்தனர். மெகா அமைச்சரவையின் செலவுகள் மாதாந்தம் கூடிக் கொண்டே போகின்றது.

அரச ஊழியர்கள் சம்பள அதிகரிப்புக் கேட்டு போராட்டம் நடத்தினால் அவர்களுக்குக்கிடைப்பது பொலிஸாரின் குண்டாந்தடியடியும், கண்ணீர்ப்புகையும் தான். பௌத்த நாட்டில் மகா சங்கத்தினருக்குக் கூட மரியாதையில்லாத நிலை தான். எத்தனை பௌத்த குருமார் பொலிஸாரால் தாக்கப்பட்டுள்ளனர். தர்ம இராச்சியம் பற்றி பேசுகின்ற ஹெல உறுமயவின் வாய்கள் கூட பூட்டுப் போடப்பட்டுள்ளன.

இந்த பேரபாயத்திலிருந்து நாட்டைப் பாதுகாக்க வேண்டுமானால் நாமனைவரும் கட்சிக் கொள்கைகளுக்கப்பால் நின்று ஒன்றுபட்டுப் போராட முன் வரவேண்டும் எனவும் திஸ்ஸ அத்தநாயக்க அழைப்பு விடுத்தார்.

No comments: