Friday, 1 August 2008

இலங்கைத் தமிழர்களைக் இந்தியா ஒருபோதும் கைவிடாது--இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்

இலங்கைத் தமிழர்களைக் இந்தியா ஒருபோதும் கைவிடாது என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்ததாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வின்போது தமிழர்களுக்கு முக்கியத்துவம் வழங்கித் தீர்வு முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். ‘சார்க்’ மாநாட்டுக்காக இலங்கை சென்றுள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை இலங்கை நேரம் இன்று (ஓகஸ்ட்1) மாலை இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்தனர்.


இதன்போது வடக்குகிழக்கு இணைப்பைத் தாம் வலியுறுத்தியதாகத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், இந்த இணைப்பு மேற்கொள்ளப்படாத நிலையில் தமிழர்கள் ஐக்கிய இலங்கைக்குள் வாழ்வதைப் பற்றிச் சிந்திக்க வேண்டியிருக்கும் எனச் சுட்டிக் காட்டினார்.

அத்துடன் தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவது தொடர்பிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மன்மோகன் சிங்கிற்கு விளக்கமளித்தனர்.

இலங்கைப்படையினர் அனைத்து ஆயுதங்களையும் தமிழ் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் குறிப்பிட்டது.


இலங்கை அரசாங்கம் இந்தியா தம்பக்கம் இருப்பதாகத் தெரிவித்துக் கொண்டே இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என்றும் அவர்கள் சுட்டிக் காட்டினார்.

இலங்கை அரசாங்கம் அத்துமீறிய குடியேற்றம் மட்டுமல்லாது அனைத்திலும் சிங்கள மயம் என்ற கொள்கையையும் திணித்து வருவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் குறிப்பிட்டனர்.


இந்தநிலையில் கருத்துரைத்த இந்திய மன்மோகன் சிங், தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தாம் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சு நடத்தவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத் தீர்வையல்ல அரசியல் தீர்வையே இந்தியா, இலங்கையில் ஏற்படவேண்டும் என வலியுறுத்துகிறது என்றும் இந்தியப் பிரதமர் குறிப்பிட்டார்.

No comments: