Friday, 1 August 2008

நாகர்கோவில் ஊடாக தரையிறங்கி குடாநாட்டை கைப்பற்ற புலிகள் திட்டம்: சிறிலங்கா புலனாய்வுத்துறை எச்சரிக்கை

யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதி ஊடாக தரையிறக்கம் ஒன்றை மேற்கொள்வதன் மூலம் யாழ். குடாநாட்டை கைப்பற்றுவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் முயற்சிக்கலாம் என்று சிறிலங்கா புலனாய்வுத்துறை வட்டாரங்கள் இராணுவத்தை எச்சரித்துள்ளன.

இது தொடர்பாக கொழும்பில் உள்ள படைத்துறை வட்டாரங்கள் கருத்து வெளியிடும்போது தெரிவித்திருப்பதாவது:

ஏ-9 வீதிக்கு மேற்காக தற்போது பாரிய இழப்புக்களை சந்தித்துவரும் விடுதலைப் புலிகள், புதிய களமுனையை திறக்க வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

சிறிலங்கா இராணுவத்தின் சுமார் ஆறுக்கும் அதிகமான டிவிசன்கள், ஏ-9 வீதிக்கு மேற்காக படை நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.

இராணுவத்திற்கு பழக்கமில்லாத நிலப்பிரதேசங்களுக்குள் அவர்களை உள்ளே வரவிட்ட பின்னர் தாக்குதல்களை மேற்கொள்ளும் விடுதலைப் புலிகளின் பழைய தந்திரோபாயங்கள் தற்போது நடைபெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஏனெனில், எந்த எதிர்ப்புமின்றி - தமது இழப்புக்களை குறைத்துக்கொள்ளும் வகையில் - வன்னியின் மேற்குப் பகுதியிலிருந்து விடுதலைப் புலிகள் தொடர்ந்து பின்வாங்கி செல்வது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில், அங்கு வலிந்த தாக்குதல் ஒன்றை விடுதலைப் புலிகள் மேற்கொண்டால், அது அவர்களுக்கு பாரிய இழப்பையே ஏற்படுத்தும் என்பதும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயம்.

கிளிநொச்சியை நோக்கி நகரும் இராணுவத்தின் 57 ஆவது படையணி - எதிர்காலத்தில் - விடுதலைப் புலிகளின் வலிந்த தாக்குதல்களுக்கு முகம் கொடுக்கவேண்டிய ஆபத்து இருக்கிறது.

ஆனாலும், வன்னியின் மேற்குப் பகுதியில் பெற்றுக்கொண்ட தொடர்ச்சியான வெற்றிகளால், இராணுவத்தின் மனவலிமை அதிகரித்திருக்கின்றது.

ஆகவே, விடுதலைப் புலிகளின் வலிந்த தாக்குதலின்போது உடனடியாக அவர்கள் பின்வாங்குவார்கள் என்பதை இந்த தடவை எதிர்பார்க்கமுடியாது.

இவ்வாறான ஒரு நிலையில், விடுதலைப் புலிகள் நாகர்கோவில் மற்றும் அதனை அண்டிய பிரதேசத்தின் உடாக தரையிறக்கம் ஒன்றை மேற்கொண்டு, ஈரூடக தாக்குதலை நடத்தி, குடாநாட்டை கைப்பற்றுவதற்கு முயற்சிக்கலாம்.

வன்னியின் மேற்குப் பகுதியின் பெரும்பாலான பிரதேசங்கள் படையினர் வசம் வீழ்ந்து விட்ட காரணத்தினால், குடாநாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள தீவுகளின் ஊடாக வந்து தாக்குதல் நடத்துவது விடுதலைப் புலிகளுக்கு தற்போது சாத்தியமில்லாத நகர்வு ஆகும்.

ஆகவே, அடுத்த சில மாதங்களில் விடுதலைப் புலிகளின் வலிந்த தாக்குதலுக்கான முயற்சியை படைகள் எதிர்பார்க்கலாம்.

இதேவேளை, வன்னியின் மேற்கில் படையினரால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களை தக்க வைத்திருக்கும் படையணிகள், அங்கிருந்து அகற்றப்படவுள்ளன என்று தெரியவருகிறது.

களமுனைகளில் தாக்குதல் நடத்தும் படையினர் தமது நிலைகளை வலுவாக்கும் பணிகளை நிறைவுசெய்து விட்டபடியாலும் அந்த வலுவான முன்னரங்குகளை உடைத்துக்கொண்டு புலிகள் உள்ளே வரமுடியாது என்று இராணுவம் நம்பிக்கை கொண்டுள்ளதாலும், முன்னர் கைப்பற்றிய பிரதேசங்களை தக்கவைத்திருக்கும் படைகளை வேறு பிரதேசங்களுக்கு மாற்றும் நடவடிக்கைகளை இராணுவம் மேற்கொண்டு வருவதாக தெரியவருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: