சார்க் மாநாட்டுக்காக செலவு செய்த நிதியை மீளப்பெற்றுக்கொள்வதற்கே அரசாங்கம் புதிய வரிகளை அறிமுகப்படுத்தி மக்களை மேலும் சிக்கலுக்குள் தள்ளுவதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
சுற்றாடலைப் பாதுகாப்பதற்காக சகல கையடக்கத்தொலைபேசிகள், 40 வற்றுக்கு மேற்பட்ட மின்குமிழ்கள் மற்றும் வாகனப் பாவனையாளர்களிடமும் வரி அறவிடுடவிருப்பதாக அரசாங்கம் நேற்று அறிவித்தது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை விமர்சித்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதம கொரடா ஜோசப் மைக்கல் பெரேரா, இந்த நடவடிக்கை மூலம் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு மேலும் சுமைகளைக் கூட்டும் வகையில் அமைந்துவிடும் எனக் கூறியுள்ளார்.
சார்க் மாநாட்டுக்கு பெருந்தொகைப் பணத்தை செலவுசெய்திருந்த அரசாங்கம், தற்பொழுது அந்தப் பணத்தை மீட்பதற்காக இவ்வாறான தேவையற்ற வரிகளை அறிமுகப்படுத்துவதாகவும், வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில் மேலும் புதிய வரிகளை அறிமுகப்படுத்துவது மக்களை மேலும் கஷ்டத்துக்குத் தள்ளும் நடவடிக்கை எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்தப் புதிய வரிகளை அறிமுகப்படுத்தி மக்கள் பாதிப்படைய அனுமதிக்கப்போவதில்லையெனவும் இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சி பிரதம கொரடா ஜோசப் மைக்கல் பெரேரா கூறியிருந்தார்.
அனைத்து கையடக்கத்தொலைபேசிகளின் மாதாந்த அறவீட்டிலும் 2 வீதத்தை சுற்றாடல் பாதுகாப்பு வரியாகப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதேபோல, 40 வற்றுக்கு மேற்பட்ட மின்குமிழ்களைக் கொள்வனவு செய்பவர்கள் மற்றும் வாகனப் பாவனையாளர்கள் அனைவரிடமிருந்தும் வரிகளை அறவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டிருந்தது.

No comments:
Post a Comment