வெள்ளம் காரணமாக இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர் அத்துடன் 7 மாவட்டங்களைச் சேர்ந்த 52 ஆயிரத்து 752 குடும்பங்களை சேர்ந்த 2 லட்சத்து 25 ஆயிரத்து 440 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
அதிகளவான வெள்ளம் அனர்த்தம் களுத்துறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் வெள்ளம் காரணமாக 9 பேர் உயிரிழந்துள்ளதுடன் 43 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.
இதனை தவிர 54 வீடுகள் சிறியளவில் சேதமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக களுத்துறை மாவட்டத்தில் 62 ஆயிரத்து 719 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை தவிர கொழும்பு மாவடத்தில் 8 ஆயிரத்து 714 குடும்பங்களும், இவர்களில் 391 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்கள் 7 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் ஹங்வெல, சிறிஜயவர்தனபுர, கொலன்னாவ ஆகிய பிரதேச செயலக பிரிவுகள் வெள்ளத்தினால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. இதேவேளை நுவரெலியா அம்பகமு கோரள பிரதேச செயலாளர் பிரிவில் ஏற்பட்ட மண்சரிவினால் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 14 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன. காலி மாவட்டத்தில் நெலுவ பிரதேச செயலாளர் பிரிவில் ஏற்பட்ட மண்சரிவில் ஒருவர் பலியானதுடன் அனர்த்தம் காரணமாக 2 ஆயித்து 752 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.
கேகாலை மாவட்டத்தின் வாரியபொல பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் ஒருவர் இறந்துள்ளார். இந்த நிலையில் கம்பாஹா மாவட்டத்தில் வெள்ளம் காரணமாக 16 ஆயிரத்து 334 குடும்பங்களை சேர்ந்த 75 ஆயிரத்து 149 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இதில் 476 குடும்பங்கள் 6 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாத்தறை மாவட்டத்தில் ஆயிரத்து 954 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவித்துள்ளது.
அதேவேளை இரத்தினபுரி மாவட்டத்;தில் 6 ஆயிரத்து 781 குடும்பங்களை சேர்ந்த 28 ஆயிரத்து 868 பேர் பாதி;க்கப்பட்டுள்ளனர். களுத்துறை மாவட்டத்தில் வரலாற்றில் முதல் முறையாக பாரிய வெள்ள அனர்த்தம் இதுவென தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளம் ஏற்பட்டுள்ள பல பிரதேசங்களில் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்புகள் செயலிழந்துள்ளதாக நிவாரண பணியாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
கடற்படையை சேர்ந்த 175 பேர் நிவாரண பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை மாவட்டங்களில் உலங்குவானூர்தி ஒன்று நிவாரண பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் கடற்படையினரின் 16 படகுகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவிக்கின்றது.
No comments:
Post a Comment