இலங்கை கடற்படையினரின் காட்டுமிராண்டித்தனமான செயலை கடுமையாக கண்டிப்பதாக தமிழக முன்னாள் முதலமைச்சரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழத்தின் பொதுச் செயலாளருமான ஜெ.ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவுக்கு இப்போதுதான் கண் தெரிகிறதா!!!
தமிழக அரசு விதித்த 45 நாள் தடைக்குப் பின்னர் கடந்த இரண்டு நாட்களாக தமிழக மீனவர்கள் ஏராளமான படகுகளில் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஜூன் 2-ம் தேதியன்று ராமேஸ்வரம் பகுதி மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனனர்.
இதில் சந்தியாகு என்ற மீனவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இலங்கை கடற்படையினரின் இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாக ஜெயலலிதா நேற்று (யூன்3) வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு தமிழக மீனவர்கள் அடிக்கடி ஆளாகி இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.
ஆழ்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படுவதும் சுட்டுக் கொல்லப்படுவதும் அன்றாட நடவடிக்கைகளாக இருந்து வருகின்றன.
தமிழக மீனவர்கள் தினம் தினம் செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே தமிழக முதலமைச்சர் கருணாநிதி ‘கடிதம் எழுதுகிறேன்’, ‘நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்கிறேன்’ என உருக்கமாகப் பேசி தட்டிக் கழிக்காமல்,
இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு உறுதியான நடவடிக்கையை முதல்வர் கருணாநிதி எடுக்க வேண்டும்.
இலங்கை கடற்படையினரால் உயிரிழக்கும் மீனவர் குடும்பத்தினருக்கான கருணைத் தொகையை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக முதல்வர் உயர்த்தித் தர வேண்டும்” எனவும் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:
Post a Comment