கடந்த சில மாதங்களாக இடம்பெற்றுவரும் குண்டுத் தாக்குதல்களில் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுகின்றமை தொடர்பாக இலங்கை கத்தோலிக்க மதகுருமார் கவலை வெளியிட்டுள்ளனர்.
“எந்தவொரு மனித உயிரையும் கொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுகின்றமை பயங்கரமானது. இவ்வாறான நிலையில் தொடர்ந்தும் இடம்பெற்றுவரும் பயங்கரவாதம் மற்றும் வன்முறைகளை நாங்கள் கண்டிக்கின்றோம். வன்முறைகள் மூலம் எதனையும் சாதிக்கமுடியாது. வன்முறைகளைக் கைவிட்டு விடுதலைப் புலிகளும், இலங்கை அரசாங்கமும் சமாதான வழியில் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணவேண்டும்” என இலங்கை கத்தோலிக்க மதகுருமார் மாநாடு எனும் அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்பொழுது நாட்டில் ஏற்பட்டிருக்கும் நிலையை கருத்தில்கொண்டு அரசாங்கம் மற்றும் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து வன்முறைகள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளிலிருந்து அப்பாவிப் பொதுமக்களையும், சிறுவர்களையும் பாதுகாப்பதற்கு முன்வரவேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
“மோதல்கள் இடம்பெறும் பகுதிகள் உட்பட நாட்டின் அனைத்துப் பாகங்களிலுமிருக்கும் அப்பாவிப் பொதுமக்களைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். சமாதான வழிமூலமே இனப்பிரச்சினைக்கு இறுதித் தீர்வுகாணமுடியும் என்பதால் ஜனாதிபதியும், அரசாங்கமும் அனைத்து அரசில்வாதிகளையும் கூட்டிணைத்து பிரச்சினைகளுக்கு அமைதிவழியில் தீர்வுகாணவேண்டும். சமாதானத்தின் மூலம் பாரிய அர்த்தமொன்றைத் தவிர்க்கமுடியும்” என இலங்கை கத்தோலிக்க மதகுருமார் மாநாடு எனும் அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment