இலங்கையில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து உல்லாசப் பயணிகளின் வருகையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக உல்லாச விடுதிகள் சங்கத்தின் பிரதித் தலைவரும், செரனடீப் லெஷர் விடுதியின் முகாமைத்துவப் பணிப்பாளருமான சிறிலால் மித்தம்பல தெரிவித்துள்ளார்.
எனினும், தற்பொழுது தோன்றியிருக்கும் நிலைமையானது உல்லாசப் பயணத்துறையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தாது எனவும், இதனைவிட மோசமான நிலைமைகளைக் கடந்தகாலத்தில் எதிர்கொண்டிருந்ததாகவும் இலங்கை சுற்றுலாத்துறை சபையின் செயலாளர் ஜோர்ஜ் மைக்கல் கூறியுள்ளார்.
உல்லாசப் பயணிகளை இலங்கைக்கு வரவழைப்பதற்கு ஒவ்வொருமுறையும் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்போது, 2001ஆம் ஆண்டு கட்டுநாயக்க விமானத்தளத் தாக்குதலின் பின்னர் ஒரு பின்னடைவு ஏற்பட்டே வருகிறது. “தற்பொழுது இடம்பெறும் குண்டுவெடிப்புக்கள் அசாதாரணமானவைதான் எனினும், கடந்த காலத்தில் எதிர்கொண்டளவுக்கு நாம் இன்னமும் செல்லவில்லை. தற்போதைய நிலையிலிருந்து விரைவில் மீண்டுவிடலாம்” என மைக்கல் கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தார்.
இதேவேளை, மோதல்கள் காரணமாக உல்லாசப் பயணத்துறை மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக மித்தபால கூறியுள்ளார். வடக்கு, கிழக்கிற்கு உல்லாசப் பயணிகளை அழைத்துச்செல்லமுடியாத நிலை காணப்படுகிறது என்றார் அவர்.
“தற்பொழுது மோதல் கொழும்புக்கு வந்துள்ளது. ஒவ்வொரு நாளும் அப்பாவிப் பொதுமக்களே கொல்லப்படுகின்றனர். பாதுகாப்பு நிலைவரம தொடர்பாக வெளிநாடுகள் நாளாந்தம் செய்திகளை புதுப்பித்துக்கொண்டிருப்பதுடன், பயண எச்சரிக்கைகளை வெளிநாடுகள் விடுத்துவருகின்றன. இதனால் கடந்த பல வருடங்களாக இந்தத் துறை மோசமானநிலைக்குச் சென்றுள்ளது” என மித்தம்பல குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment