Tuesday, 3 June 2008

'ஆழ ஊடுருவித் தாக்கும் அணியின் தாக்குதல்கள் இலங்கை இராணுவத்தின் பலவீனமே'- ப. நடேசன்


விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் நடத்தப்படும் இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவித் தாக்கும் அணியின் தாக்குதலானது இலங்கை இராணுவத்தின் பலவீனத்தையே காட்டுவதாக விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் துறைப்பொறுப்பாளர் ப. நடேசன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தொடர்ச்சியாக நடக்கும் கிளெமோர் தாக்குதல்கள் குறித்து தமிழோசையிடம் பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

ஆழ ஊடுருவும் அணியினர் உங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஊடுருவித் தாக்குதல் நடத்துவது உங்கள் அமைப்பின் பலவீனத்தைக் காட்டவில்லையா என்று கேட்டதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விடுதலைப்புலிகளுடன் நேரடியாக மோதமுடியாமல் தோல்வியைத் தழுவும் நிலையிலேயே இலங்கை அரசாங்கப் படைகள் இவ்வாறான, அநாகரிகமான தாக்குதல்களை நடத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை இலங்கையின் அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நடத்தப்படும் குண்டுத் தாக்குதல்களுக்கும், தமது அமைப்புக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது என்றும், தமது அமைப்பு ஒரு விடுதலைப்போராட்ட அமைப்பு என்றும், தாங்கள் மக்களை நேசிப்பவர்கள் என்றும், அனைத்து உயிர்களையும் நேசிப்பவர்கள் என்றும் அவர் கூறினார்.

சர்வதேச சமூகம் எங்களை விரைவில் அங்கீகரிக்கும்

இலங்கை அரசாங்கத்தினால் மீறப்படுகின்ற மனித உரிமை மீறல்களை நாமும் சுயாதீனமாக இயங்கும் மனித உரிமைகள் அமைப்புகளும் சர்வதேச சமூகத்தின் முன் கொண்டு சென்றுள்ளோம். இவ்வாறான நிலையில் இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகம் எதிர்காலத்தில் எங்கள் மீதான தடையை நீக்கி எங்களை அங்கீகரிக்கும் நிலை வரும் என்ற நம்பிக்கை இருக்கின்றது என்று புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்; இலங்கை அரசாங்கத்தினால் மீறப்படுகின்ற மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் புலிகள் தொடர்பிலான இந்தியாவின் அணுகு மாற்றம்பெற்று எம்மீதான தடை நீக்கப்பட்டு எங்களை அங்கீகரிக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

தென்னிலங்கை சிங்கள மக்கள் கூட அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அங்குள்ள பத்திரிகையாளர்கள் அரசாங்கத்தினால் கடத்தப்படுகின்றனர். அரசுக்கெதிரான அரசியல் கொள்கையுள்ளவர்கள் கடத்தப்படுகின்றார்கள் என்பதை தென்னிலங்கை ஊடகங்களே தெளிவாக சொல்கின்றன.

No comments: