உடன்படி க்கைகள் மூலமாகவன்றி புதிய அரசியலமைப்பினூடாக இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸவிதாரண தெரிவித்துள்ளார்.
இதற்கமைய தற்போதைய அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொண்டு புதியதொரு அரசியல் யாப்பை வரையும் பணிகளை சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு மேற்கொள்ளுமென்று அமைச்சர் விதாரண தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் தீர்வு முறையை ஒத்தவாறு தீர்வொன்றைத் தயாரிப்பதற்கு சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து புதிய அரசியல் யாப்பொன்றைத் தயாரிக்கும் பணிகள் துரிதப்பட்டுள்ளதாகவும் திஸ்ஸவிதாரண தெரிவித்தார்.
சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு ஸ்தாபிக்கப்பட்டு ஒன்றரை வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை 76 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
இதில் 93% விடயங்களுக்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. எனினும் சில சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்கே பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன. வட அயர்லாந்தின் சமாதானத் தீர்வுத்திட்டத்தை ஆராய்ந்து வந்ததன் பின்னர் இந்தப் பேச்சுவார்த்தைகளில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது
என்று தெரிவித்த அமைச்சர் விதாரண, வட அயர்லாந்து தீர்வு தொடர்பாக முழுமையான அறிக்கையொன்றை சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்குச் சமர்ப்பித்துள்ளதாகவும் அதனைப் பற்றி அடுத்தடுத்த கூட்டங்களில் கலந்துரையாடப்பட்டு சிக்கலான விடயங்களுக்குத் தீர்வு காணப்படுமென அமைச்சர் கூறினார்.
வட அயர்லாந்தின் சமாதானத் தீர்வு உடன்படிக்கை மூலம் 30 வருடகால ஆயுதப் போராட்டத்திற்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. கடந்த 10 வருடகாலமாக அமுல்படுத்தப்பட்டு வரும் இந்த சமாதான உடன்டிக்கைக்கு அரசியலமைப்பு ரீதியான பாதுகாப்பு கிடையாது.
எனினும் ஆட்சிக்குவரும் எந்தக் கட்சியும் அதனை மீறாமல் நடைமுறைப்படுத்தி வருகின்றது. இவ்வாறான ஒரு இணக்கப்பாட்டை இலங்கை விடயத்தில் அரசியல் கட்சிகளுக்கிடையே ஏற்படுத்துவதற்கே சட்வகட்சிப் பிரதிநிதிகள் குழு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
என்றாலும் இலங்கைப் பிரச்சினையை உடன்படிக்கை மூலமாகவன்றி அரசியலமைப்பின் ஊடாக நிரந்தரமாகத் தீர்ப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சர்வகட்சிக்குழு தயாரிக்கும் அரசியலமைப்பு பாராளுமன்றத்தின் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடனும் சர்வஜன வாக்கெடுப்பின் அங்கீகாரத்துடனும் நடைமுறைப்படுத்தப்படும்.
சர்வகட்சிப் பிரதிநிதிகள் தயாரிக்கும் புதிய தீர்வுத்திட்டத்தின் கீழ் மத்திய மாகாண அரசுகளுக்கான அதிகாரங்கள் குறித்தொதுக்கப்படுவதுடன் நிதி ஆணைக்குழு அபிவிருத்திக்குழு என்பவற்றை மாகாணங்களுக்கும் ஸ்தாபிக்க முன்மொழியப்படுகின்றது.
இவ்வாறு மத்திய அரசுக்கு 103 விடயங்கள் தொடர்பான அதிகாரப் பகிர்வும் மாகாண அரசுக்கு 87 விடயங்கள் தொடர்பாகவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
இந்தத் தீர்வு முழுமையப்படுத்தப்பட்டதும் ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பனவற்றையும் அழைத்து அவர்களின் கருத்துக்களையும் பெற்றுக் கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
No comments:
Post a Comment