Monday, 2 June 2008

முஸ்லிம் வர்த்தகர் படுகொலையினை கண்டித்து காத்தான்குடியில் ஹர்த்தால் ஜனாஸா நல்லடக்கத்தின் போது ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு, கல்லடி பிரதேசத்தில் வைத்து முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தினைக் கண்டித்து நேற்று காத்தான்குடி பகுதியில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

காத்தான்குடி அல் சயிட் வீதியைச் சேர்ந்த அப்துல் பாறூக் குத்தூஸ் என்று அழைக்கப்படும் வர்த்தகர், மரக்கறி வியாபாரத்திற்காக மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்திற்குச் சென்றிருந்த வேளையில், இவரை அழைத்து சென்ற ஆயுததாரிகள் கல்லடி சிவானந்தா வித்தியாலயத்திற்கு அருகில் வைத்து வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

இச் சம்பவத்தினைக் கண்டித்து நேற்று காத்தான்குடியில் கடைகள், வர்த்தக நிலையங்கள் என்பன பூட்டப்பட்டு ஷர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இதனால், பாடசாலைகள், அரச அலுவலகங்கள் என்பன இயங்கவில்லை. எங்கும் சோகமாகக் காட்சியளித்தது. காத்தான்குடி மற்றும் ஏறாவூர் போன்ற பகுதிகளைச் சேர்ந்த முஸ்லிம் வர்த்தகர்கள் எவரும் நேற்று தமிழ்ப் பிரதேசங்களுக்கு வியாபாரத்திற்குச் செல்லவில்லை;

உள்ளூர் வாகனப் போக்குவரத்தும் இடம்பெறவில்லை. இதேவேளை, மேற்படி சம்பவத்தைத் தொடர்ந்து காத்தான்குடி மற்றும் ஏறாவூர் போன்ற பகுதிகளைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் மக்கள் அச்சத்தின் காரணமாக இடம்பெயர்ந்து செல்லத் தொடங்கியுள்ளனர்.

இதனால், மேற்படி பிரதேசங்களின் எல்லைக் கிராமங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான வீதிகள் உட்பட எல்லைக் கிராமங்களிலும் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் இராணுவத்தினரும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதேவேளை, வெட்டிக் கொல்லப்பட்ட முஸ்லிம் வர்த்தகரின் ஜனாஸா நல்லடக்கம் நேற்றுக் காலை காத்தான்கடி பதுரியா ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில் நடைபெற்றது.

வர்த்தகரின் ஜனாஸாவினை மையவாடியில் வைத்துக் கொண்டு இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நல்லடக்கத்தின் போது பெருமளவு படையினரும், பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

No comments: