தனுஷ்கோடி அருகே இலங்கை கடற்படையினர் நடத்திய வெறித் தாக்குதலில் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் பெரும் கொதிப்படைந்துள்ளனர்.
தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் இருந்து வந்த 45 நாள் மீன் பிடித் தடை நீங்கி கடந்த சில நாட்களாகத்தான் மீனவர்கள் கடலுக்குப் போய் மீன் பிடிக்க ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில், தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவரை இலங்கை கடற்படை கொன்று குவித்துள்ளது.
ராமேஸ்வரம், தங்கச்சி மடம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 800க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். நேற்று நள்ளிரவில் தனுஷ்கோடிக்கும், கச்சத்தீவுக்கும் இடையே நடுக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு இலங்கை கடற்படையினர் விரைந்து வந்தனர். வந்த வேகத்தில் தமிழக மீனவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிகளால் சுட்டனர். இதில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் சந்தியாகு உடலில் குண்டு பாய்ந்தது. அவர் அலறித் துடித்தபடி கீழே விழுந்தார். விழுந்த வேகத்தில் அவரது கை உடைந்து போனது. பின்னர் கடற்படையினர் அங்கிருந்து போய் விட்டனர்.
இதையடுத்து தமிழக மீனவர்கள் சந்தியாகுவுடன் கரைக்கு விரைந்தனர். பின்னர் அவரை ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சந்தியாகு உயிரிழந்தார்.
இந்த படுகொலையால் ராமேஸ்வரம், மண்டபம், தங்கச்சிமடம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளன். மீன்பிடி தடை நீங்கி இப்போதுதான் மீன் பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இலங்கை கடற்படையினர் நடத்தியுள்ள இந்த வெறியாட்டத்தால் அவர்கள் கொந்தளிப்படைந்துள்ளனர்.
Monday, 2 June 2008
இலங்கை கடற்படை வெறித் தாக்குதல் - தங்கச்சி மடம் மீனவர் பலி
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
though pakisthan is our enemy country,they never kill our fisherman!
Post a Comment