Thursday, 14 August 2008

10 வருடங்கள் - ஆனால் யாழ்ப்பாணம் இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை – சிங்கள இணைய செய்தி ஆய்வு

ரச படையினரால் 10 வருடங்களுக்கு முன்னரே யாழ்ப்பாணம் கைப்பற்றபட்டிருந்த போதிலும் அந்த பிரதேசத்தில் இதுவரை சிவில் நிர்வாகமோ மக்களின் வாழ்க்கையோ இன்னும் வழமைக்கு திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்கள் கடத்திச் செல்லப்படுதல் மற்றும் காணாமல் போதல் போன்ற சம்பவங்கள் தொடர்பான செய்திகளை தொடர்ந்தும் கேட்க முடிகிறது என அங்கு சென்றிருந்த சிங்கள இணையத்தளம் ஒன்றின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


பொருட்களின் விலைகள், நாட்டின் ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடும் போது பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லையென்ற போதிலும் சீமெந்து ஒரு மூடை 2 ஆயிரம் முதல் 3 ஆயிரத்து 500 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது.

ஏனைய பயன்பாட்டு பொருட்களின் தட்டுப்பாடு, நியாயமற்ற விலை அதிகரிப்பு தொடர்பான உணர்வை ஏற்படுத்துகின்றன. யாழ்ப்பாண நகரில் வழமை போல் ஊரடங்குச் சட்டமும், ஒன்றரை மணித்தியாலங்கள் மின்வெட்டும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இரவு 9 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் அதிகாலை 4 மணிக்கு நீக்கப்படுகிறது. மின் வெட்டு மாலை 6.30 முதல் 8 மணிவரை தினமும் அமுல்படுத்தப்படுகிறது. ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் போது யாழ்ப்பாண நகரில் மனிதர்களின் நடமாட்டத்தைக் காணமுடியாது.

யாழ்ப்பாண நகரின் பிரதான பேரூந்து தரிப்பிடத்தில் இருந்து வெளியிடங்களுக்குச் செல்லும் பேரூந்துகள் மாலை 5 மணியுடன் தனது பயணத்தை முடித்துக் கொள்வதுடன் மாலை ஆறு மணியுடன் பிரதான சந்தை உட்பட வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு விடுகின்றன.


யுhழ்ப்பாணம் அரச கட்டுப்பாட்டு பகுதி என்ற போதிலும் யாழ்ப்பாண சூழல் வெளியிடம் ஒன்றின் உணர்வையே ஏற்படுத்துகிறது. சுதந்திரமான நடமாட்டங்கள், மக்கள் ஒன்று கூடுதல் உள்ளிட்ட பொது வைபவங்கள் அங்கு நடைபெறுவதில்லை.

உரிய காலத்தில் கடிதங்களோ, செய்திப் பத்திரிகைகளோ கிடைப்பதில்லை. சகல ஊடகவியலாளர்களும் படையினரால் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவானவர்கள் என்ற நிலைப்பாட்டிலேயே பார்க்கப்படுகின்றனர். இதனால் யாழ்ப்பாண மக்கள் தகவல்களை அறிந்து கொள்வதில் பல்வேறு தடைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.


மனித உரிமை ஆணைக்குழுவின் அலுவலகம் ஒன்று இயங்கிய போதிலும் அதன் மூலம் என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது கேள்விக்குரிய விடயமே.


மனித உரிமை ஆணைக்குழுவில் பணிபுரியும் அதிகாரிகள் ஊடகங்களுக்கு தகவல் வழங்குவது தடைசெய்யப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள பிரதான அலுவலகத்தின் மூலம் அவர்களுக்கு இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.


யாழ்ப்பாணத்தில் இருந்து பொதுமக்கள் வெளியில் செல்ல தடை அல்லது அதனை மேற்கொள்வது பாரிய சிரமமான காரியமாக இருக்கிறது. இந்த விடயத்தினால் அதிக சிரமங்களை எதிர்நோக்கியிருப்பவர்கள் வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளை எதிர்பார்த்துள்ள இளைஞர்களே.



ஒருவர் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற வேண்டுமானால் அவர் இராணுவ சிவில் விவகார அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும். இந்த அனுமதியை பெறுவதற்கு அவர்கள் பல ஆவணங்களை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.


இந்த ஆவணங்களுடன் தமது அடையாள அட்டையைச் சமர்ப்பித்து வெளியில் செல்ல அனுமதி கிடைத்த பின்னர், புறப்பட்டு செல்வதற்கு பல மாதங்கள் அதாவது மூன்று அல்லது அதற்கும் மேலான காலம் வரை காத்துக்கிடக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையை யாழ்ப்பாண மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.


அத்துடன் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வருவபவர்களுக்கு மாத்திரம் அல்ல வெளியில் இருந்து அங்கு செல்லும் எவருக்கும் யாழ் நகரில் எந்த இடத்தையும் புகைப்படம் எடுக்க அனுமதியில்லை. அவ்வாறு புகைப்படம் எடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் இதுவரை 28 சட்டவிரோத கொலைகள் இடம்பெற்றுள்ளன.


74 பேர் காணாமல் போயுள்ளனர். இவர்களில் 11 பேர் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். தற்பாதுகாப்புக்காக சிறைக்கு செல்வோர் உலகில் உள்ள ஒரே நகரம் யாழ்ப்பாணமாகும். இந்த வருடத்தில் மாத்திரம் 45 பேர் இவ்வாறு தற்பாதுகாப்புக்காக சிறை சென்றுள்ளனர்.


இதேவேளை யாழ்ப்பாணம் நாகர்கோயில் பிரதேசத்தில் 4 ஆயிரம் மீனவ குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இவர்களில் ஒரு நாளைக்கு 250 பேருக்கு மாத்திரம் 2 கிலோ மீட்டருக்குள் சென்று மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒரு குடும்பத்திற்கு மாதத்தில் இரண்டு நாட்கள் மாத்திரமே கடற்றொழிலில் ஈடுபட வாய்ப்பு வழங்கப்படுகிறது.


இந்த வருமானத்தில் அவர்கள் மாதம் முழுதும் வாழவேண்டிய நிலை காணப்படுகிறது. வலிகாமம் மற்றும் பலாலி விமான நிலைய பகுதிகள் அதிஉயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டதால் அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள் மைலிட்டி, பலாலி, குரும்பசிட்டி, வசாவிளான், கீரிமலை, இளவாலை, தெல்லிப்பழை ஆகிய பிரதேசங்களில் உள்ள அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.


இவ்வாறான ஒரு முகாம் கோப்பாய் உரும்பிராய் தெற்கில் விஷ;ணு கோயிலில் அமைந்துள்ளது. அங்கு வாழும் 81 குடும்பங்களுக்கு 9 கழிவறைகளே உள்ளன. வலிகாமத்தில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் இங்கு தங்கியுள்ளனர்.


இவர்கள் இந்த முகாமுக்கு வந்து 18 வருடங்கள் கடந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இங்கு உள்ள பிள்ளைகளில் பெருபாலானவர்கள் பாடசாலைகளுக்குச் செல்வதில்லை.


இவர்கள் தங்கியுள்ள குடியிருப்புகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு மற்றும் கரிட்டாஸ் அமைப்பு ஆகியன அமைத்துக் கொடுத்துள்ளன. இவர்களுக்கு மாதாந்தம் ஆயிரத்து 240 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.


கடந்த 90 ஆண்டுக்கு பின்னர் இந்த தொகையில் ஒரு சதமேனும் அதிகரிக்கப்படவில்லை. அத்துடன் கடந்த இரண்டு மாதங்களாக இந்த உலர் உணவுப்பொருட்களும் வழங்கப்படவில்லை.


இங்கு வாழும் மக்கள் உயிர் வாழ்வதற்காக அரிசி ஆலைகளில் கொட்டப்படும் உமியில் இருந்து பெறும் குருணை அரிசியை தமது உணவுக்காக பயன்படுத்தி வருவது வேதனைக்குரிய விடயமே. இங்கு வாழும் மக்கள் தமக்கு பலாலி விமான நிலையத்திற்கு அருகில் இரண்டு ஏக்கர் நிலமும் வீடும் இருந்ததாக மிக துயரத்துடன் கூறியுள்ளனர்.



அவை உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் சிக்கின அன்றில் இருந்து தமக்கு இங்கு வாழும் நிலையேற்பட்டுள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் சிலரினால் சிவில் விவகார அலுவலகம் நடத்தப்பட்டு வருகிறது.




இதன் செயற்பாடுகள் மிகவும் மந்தகதியிலேயே இடம்பெற்று வருகின்றன. யாழ்ப்பாண நகரில் வாழ்க்கை வழமை நிலைக்கு கொண்டு வர எந்த நடவடிக்கையும் இந்த அலுவலகத்தினால் மேற்கொள்ளப்படுவதில்லை. அத்துடன் வட மாகாண ஆளுநரின் அலுவலகம் திருகோணமலையில் செயற்படுகிறது.



இதனால் யாழ்ப்பாணத்திற்கு எந்த நன்மையும் கிடைப்பதில்லை. இவ்வாறான நிலையில் யாழ்ப்பாணத்தில் வழமை நிலையை ஏற்படுத்தவும் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தவும் இதனை விட அதிகாரங்களுடன் வினைத்திறன் கூடிய சிவில் நிர்வாகம் தாமதமின்றி மேற்கொள்ளப்பட வேண்டும்.


அவ்வாறில்லாது போனால் இதனால் நன்மையடையப் போவது யாழ் மக்கள் அல்ல பிரிவினைவாதிகளும் அதிகாரத்தை பரவலாக்க வேண்டாம் என கூறுபவர்களுக்குமே.


மீட்பு குறித்து இரவு பகலாக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் அரசாங்கம் மீட்கப்பட்டு 10 வருடங்களுக்கு மேலாக அவர்கள் நிர்வகிக்கும் யாழ்ப்பாணத்தில் வாழும் மக்கள் தொடர்பில் இதனை விட நியாயமாக நோக்க வேண்டும்.


எவ்வாறாயினும் யாழ்ப்பாணத்தில் உள்ள அகதி முகாம் ஒன்றில் வாழும் ஒருவர் இவ்வாறு கூறியுள்ளார். ‘அண்ணே எமக்கு ராமன் ஆண்டாலும் ஒண்டுதான் ராவணன் ஆண்டாளும் ஒண்டுதான், அப்படி இல்லையென்றால் ராமனுடன் வந்த அனுமன் ஆண்டாலும் ஒண்டுதான் எமக்கு அச்சமின்றி சுதந்திரமாக வாழ வேண்டும்’ என அந்த அகதி முகாம் வாசி தெரிவித்துள்ளார் என அந்த சிங்கள இணையத்தின் செய்தி ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ந‌ன்றி:குளோபல் தமிழ் செய்திகள்

No comments: