Saturday, 2 August 2008

13 வது திருத்தச்சட்டம் அல்ல 13 வது திருத்தச்சட்டம் பிளஸ் பிளஸ் தான் தீர்வு மன்மோகன்சிங்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸினர் இன்று மாலை இந்திய பிரதமமந்திரி மன்மோகன்சிங்கை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர். இந்த சந்திப்பு கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்றுள்ளது.


இதன்போது இனப்பிரச்சினை தொடர்பாகவும், அதற்கான முனைப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன் போது கருத்துரைத்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக அமைக்கப்பட்டுள்ள அனைத்துக்கட்சி குழுவின் பல விடயங்கள் இணக்கத்துக்கு வந்துள்ளன.


எனவே அதனை முன்கொண்டு சென்று அதன் மூலம், புதிய அரசியலமைப்பை உருவாக்கி இனப்பிரச்சினையை தீர்க்கமுடியும் எனவே இதற்கு இந்தியா தனது முழு ஊக்கத்தையும் வழங்கவேண்டும் என தெரிவித்தது.


இதன் போது தமது கருத்தை முன்வைத்த இந்திய பிரதமர் மன்மோகன்சிங், 13வது திருத்தச்சட்டம் என்பது ஒரு தற்காலிக ஏற்பாடாகவே இருக்கமுடியும் என குறிப்பிட்டார். உண்மையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு 13 வது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் சென்று காணப்படும் தீர்வாக இருக்கவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.


குறிப்பாக 13 வது திருத்தச்சட்டம் பிளஸ் பிளஸ் என மன்மோகன்சிங் குறிப்பிட்டதாக ராஜதந்திர தரப்புகள் தெரிவித்துள்ளன.


இதேவேளை இலங்கையின் இனப்பிரச்சினைக்கு இராணுவத்தீர்வுக்கு இடமில்லை அரசியல் தீர்வே காணப்படவேண்டும் என இந்திய பிரதமர் மன்மோகன்சிங் நேற்று வெளியிட்டிருந்த கருத்தை வரவேற்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்pனர் இதன் போது தெரிவித்தனர்.


இதனைதவிர இந்திய வம்சாவளி இலங்கை தமிழ் மக்களின் நலன்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.


குறிப்பாக இந்திய வம்சாவளி மக்களின் கல்வி, சுகாதாரம் தொழில்துறை போன்ற விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன், பெருந்தோட்ட மக்களுக்கு பயன்பாட்டுக்கென, கூட்டுறவு அடிப்படையில்,20 பேரூந்துகளை வழங்குவதற்கு இந்திய பிரதமமந்திரி உறுதியளித்துள்ளார்.

No comments: