Friday 1 August 2008

"விகடன்" கருத்துக்கணிப்பில் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி: பா.நடேசன்


தமிழீழம் மற்றும் விடுதலைப் புலிகள் போராட்டம் நியாயம் என்று தமிழ்நாட்டின் முன்னணி ஏடான "ஆனந்த விகடன்" நடத்திய கருத்துக்கணிப்பில் தமது உணர்வுகளை வெளிப்படுத்திய அத்தனை தமிழ் உள்ளங்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் நன்றி தெரிவித்துள்ளார்.
"ஆனந்த விகடன்" (06.08.08 பதிப்பு) ஏட்டில் வெளியாகியுள்ள பா.நடேசனின் பேட்டி வருமாறு:

இலங்கையில் இப்போதைய நிலவரம் என்ன?

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சிறிலங்கா அரசு, தனது இராணுவத்தின் உதவியுடன் தமிழ் மக்கள் மீதும் தமிழீழத் தேசத்தின் மீதும் மோசமான இனப் படுகொலையை மேற்கொண்டு வருகிறது. தமிழர்களின் வாழ்விடங்கள் மீது வான்குண்டு வீச்சுக்கள், பீரங்கித் தாக்குதல்கள் எனப் பல்வேறு வடிவங்களில் தாக்கி வருகிறது. தினமும் தமிழர்கள் கொல்லப்படுகின்றனர்.


உணவுப் பொருட்களுக்கும் மருந்துப் பொருட்களுக்குமே இங்கே இப்போது பெரும் தட்டுப்பாடு.

மக்களைப் பட்டினி போட்டுக் கொன்றொழிப்பதன் மூலம் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கிவிடலாம் என சிறிலங்கா அரசு எண்ணுகிறது. அண்மைக்காலத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் தமது வாழ்விடங்களைவிட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.

இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியில், இந்த மக்களின் சுதந்திரமான வாழ்வுக்காக விடுதலைப் புலிகள் வீராவேசத்துடன் போராடி வருகின்றனர்!

ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு புலிகளின் போராட்டத்துக்கு இந்தியாவின் ஆதரவு இல்லாமல் போய்விட்டது. இந்த நிலையில் குறிப்பாக, தமிழக மக்களின் ஆதரவை எந்த வகையில் எதிர்பார்க்கிறீர்கள்?

இதைப் புலிகளின் போராட்டம் என்று குறிப்பிடுவதைவிட தமிழ் மக்களின் போராட்டம் என்று சொல்வதுதான் பொருத்தமானதாகும்.

எமது விடுதலைப் போராட்டத்துக்கான தமிழக மக்களின் ஆதரவு நீறுபூத்த நெருப்பாகவே இருந்து வருகின்றது. இதனைப் பிழையாக மதிப்பிட வேண்டாம். வரலாற்று ரீதியாக, இன, கலாசார ரீதியாக தமிழக மக்களுக்கும் எமக்கும் தொப்புள் கொடி உறவு இருந்து வருகின்றது. அவர்களின் ஆதரவு எமக்கு எப்போதும் இருந்தே வரும்.

தனி ஈழம் மற்றும் விடுதலைப் புலிகள் போராட்டம் நியாயமென்று கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்கள் தங்கள் கருத்துக்களை எங்கள் நிருபர்களிடமும் எங்கள் இணையத்தளத்திலும் எடுத்து வைத்திருக்கிறார்கள். ஆனால், ராஜீவ் கொலை வழக்கில் பிரபாகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அதில் எழுப்பப்பட்டிருக்கிறது. இதுபற்றி தங்கள் கருத்து என்ன?

உணர்வை வெளிப்படுத்திய அத்தனை தமிழ் உள்ளங்களுக்கும் நன்றி. எமது விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் இவர்கள், எமது தலைவர் தொடர்பாகத் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தவறானவையாகும். வெகுவிரைவில் இவர்களது கருத்துக்களில் மாற்றம் ஏற்படும் என உறுதியாகச் சொல்கின்றேன்.

இன்னும் எத்தனை காலத்துக்கு இந்தப் போராட்டம்?

விடுதலைப் போராட்டங்களுக்கு கால எல்லைகள் வகுத்துப் போராடுவதில்லை. ஆனால், முழுமக்கள் பலத்தோடு எமது விடுதலையை விரைவாக வென்றெடுப்போம்!

அனைத்துலக சமூகம் உங்களையும் சிறிலங்கா அரசையும் எப்படிப் பார்க்கிறது?

அனைத்துலக சமூகம் சிறிலங்கா அரசு பற்றி நன்றாகவே புரிந்தித்திருக்கிறது. அண்மையில்கூட ஐக்கிய நாடுகள்
சபையின் மனித உரிமை சபையிலிருந்து சிறிலங்கா நீக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தீவில் தொடர்ந்து நிகழும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உலக நாடுகள், மனித உரிமை அமைப்புகள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன.

அனைத்துலக சமூகம் எமது போராட்டத்தைப் பற்றியும் இயக்கத்தைப் பற்றியும் நன்றாகப் புரிந்து வைத்துள்ளார்கள்.

எமது விடுதலைப் போராட்டம் அதர்மத்தை எதிர்த்து, தர்மத்துக்காக நடத்தும் போராட்டம் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்!

இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மாறியிருக்கிறதா?

சிறிலங்கா அரசின் இராஜதந்திர நகர்வுகள் எப்போதுமே இந்திய வெளியுறவுக் கொள்கைக்குப் பாதகமாகவே இருந்து வந்துள்ளன. இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடனேயே அவர்கள் வரலாற்று ரீதியான உறவுகளையும் தொடர்புகளையும் பேணி வருகின்றனர்.


சிங்களக் கட்சிகளின் இந்தியா தொடர்பான அரசியல் கொள்கைகள் என்பன எப்போதுமே இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு எதிரானவையே. தற்போதைய போர்ச்சூழ்நிலையில் அது உச்சகட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கின்றது.


இந்த நிலையில் இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் ஏற்படும் என்பதை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றோம்.

1 comment:

ttpian said...

tigers are like water to food: tigers are air to breath:
tigers will set world standards of living conditions soon!