Wednesday, 6 August 2008

இலங்கையில் நான்கில் ஒரு குழந்தை போசாக்கின்மையால் பாதிப்பு- யுனிசெப்

இலங்கையில் நான்கில் ஒரு குழந்தை போசாக்கின்மையால் பாதிக்கப்படுவதாக யுனிசெப் தெரிவித்துள்ளது. போசாக்கின்மையைப் போக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளபோதும் மோதல்கள் இடம்பெறும் பகுதிகளிலுள்ள சிறுவர்கள் போசாக்கின்மையால் அதிகம் பாதிக்கப்படுவதாக அரசாங்கத்தின் அண்மைய கணக்கெடுப்புகளின் மூலம் அறிந்துகொள்ள முடிவதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையிலுள்ள சிறுவர்களில் 22 வீதமானவர்கள் சராசரி எடையைவிட குறைவான எடையைக் கொண்டவர்கள் என சுகாதார மற்றும் போசாக்கு அமைப்பும், குடிசன மதிப்பீட்டுத் திணைக்களமும் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 18 வீதமான சிறுவர்கள் வளர்ச்சி குன்றியவர்கள் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

“நான்கில் ஒரு குழந்தை போசாக்கின்மையால் பாதிக்கப்படுவதை ஆய்வு காட்டிநிற்கிறது. போசாக்கின்மையை ஒழிப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்ட நிலையிலும் போசாக்கின்மை தொடர்ந்தும் காணப்படுகிறது” என யுனிசெப் அமைப்பின் போசாக்குத் தொடர்பான பிரிவின் தலைமை மருத்து அதிகாரி ரேனுகா ஜயதிலக தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இடம்பெற்ற மோதல்களால் அதிகளவு இடம்பெயர்வு ஏற்பட்ட திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலேயே பெரும்பாலான சிறுவர்கள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருப்பதாக யுனிசெப் அமைப்பு கூறுகிறது. இதனைவிட பதுளை, நுவரெலியா, மொனறாகல மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் காணப்படும் வறுமை காரணமாகவும் குழந்தைகள் போசாக்கின்மையால் பாதிக்கப்படுகின்றனர் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆசிய சிறுவர்களின் உயிர்களை அச்சுறுத்தலுக்குள் தள்ளியிருக்கும் ஏழை, செல்வந்தர்களுக்கிடையிலான வித்தியாசம்

இதேவேளை, ஏழைகளுக்கும், செல்வந்தர்களுக்கும் இடையிலான வித்தியாசம் மேலும் அதிகரித்துச் செல்வதால் ஆசிய பசுபிக்கில் குறிப்பாக, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளிலுள்ள சிறுவர்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

உலக சனத்தொகையில் ஐந்தாவது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு முன்னர் உயிரிழந்த சிறுவர்களின் எண்ணிக்கையில் 40 வீதமானவர்கள் ஆசிய பிராந்தியத்தில் பிறந்தவர்கள் என யுனிசெப் அமைப்பு நேற்று செவ்வாய்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

“ஏழைகளுக்கும், செல்வந்தர்களுக்கும் இடையிலான வித்தியாசத்தில் ஏற்பட்ட அதிகரிப்பானது ஆசிய பிராந்திய நாடுகளிலுள்ள சிறுவர்கள் மற்றும் தாய்மாரின் உயிர்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது” என ஆசிய பிராந்திய சிறுவர்கள் தொடர்பான 2008ஆம் ஆண்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2006ஆம் ஆண்டு இந்தியாவில் ஐந்து வயதிலும் குறைந்த, 2.1 மில்லியன் குழந்தைகள் உயிரிழந்திருப்பதாகச் சுட்டிக்காட்டும் அந்த அறிக்கை, பொருளாதார வளர்ச்சியின்போது சுகாதாரம், போசாக்கு, சிறுவர் பாதுகாப்பு போன்றவற்றையும் கவனத்தில்கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் தனியார் சுகாதாரத்துறையின் வளர்ச்சி அதிகரித்திருப்பினால் மத்தியதர மக்களே பெருமளவில் பயனடைவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிய பிராந்தியத்தில் 1990ஆம் ஆண்டில் காணப்பட்ட ஐந்து வயதிலும் குறைந்த வயதுடைய பிள்ளைகளின் இறப்பு வீதத்தை, 2015ஆம் ஆண்டிலேயே மூன்றில் இரண்டு பங்காகக் குறைக்க முடியும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: