Saturday, 9 August 2008

அவுஸ்திரேலியாவும் விடுதலைப் புலிகளை தடை செய்யத் தீர்மானம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிப்பதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சிங்கள நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

சார்க் பிராந்திய நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிராக மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கும் வகையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அதற்கு ஆதரவான அமைப்புக்களை அவுஸ்திரேலியாவில் தடை செய்வது குறித்து ஆராயப்பட்டு வருவதாகஅந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பயங்கரவாதத்திலிருந்து பாதுகாப்பதற்கும், அதற்கு எதிரான நடவடிக்கைகளுக்காக தெற்காசிய நாடுகளுடன் தொடர்புகளைப் பேணுவதற்கும் அவுஸ்ரேலியா விரும்புகிறது.

இதற்காக தெற்காசியப் பிராந்தியத்தின் முக்கிய அமைப்புக்களுடன் இணைந்து தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும்” என அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ்ரீவன் ஸ்மித் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சார்க் கண்காணிப்பாளர்கள் பட்டியலில் ஏற்கனவே இருக்கும் சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஈரான், ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளுடன் இம்முறை அவுஸ்ரேலியாவும் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய சிலரை அவுஸ்திரேலிய காவற்துறையினர் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments: