Sunday, 10 August 2008

வன்னியில் பணிபுரியும் அரச சார்பற்ற நிறுவனங்களின் சொத்து விபரங்களை சமர்ப்பிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு உத்தரவு

ன்னியிலும், ஏனைய விடுவிக்கப்படாத பிரதேசங்களிலும் மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் உள்ளூர் மற்றும் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள், அப்பகுதிகளிலுள்ள தமது அசையும், அசையா சொத்துக்கள் குறித்த விபரங்களை சமர்ப்பிக்கவேண்டும் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

இந்த சொத்துக்கள் விடுதலைப் புலிகளின் கைகளைச் சென்றடைவதைத் தடுப்பதற்காகவே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இதேவேளை, 'நோர்வேஜியன் பீபிள்ஸ் எய்ட்' எனும் அரச சார்பற்ற நிறுவனத்தினால் வன்னியில் கைவிடப்பட்ட சுமார் 40 விசேட பயன்பாட்டுத் திறன்மிக்க வாகனங்களை, தற்போது விடுதலைப் புலிகள் பயன்படுத்தலாம் என அரசாங்கம் நம்புவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஏற்கனவே, மேற்படி அரச சார்பற்ற நிறுவனத்தினால் கைவிடப்பட்ட கண்ணிவெடியகற்றும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட பாரிய இயந்திரங்களை தற்போது விடுதலைப் புலிகள் கைப்பற்றியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


மேற்படி நிறுவனம் தமது வாகனங்கள் மனிதாபிமானப் பணிகளுக்கு மாத்திரமே பயன்படுத்தப்படும் எனவும், இராணுவ நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படமாட்டாது எனவும், தமது பணிகள் நிறைவுற்றதும் மீண்டும் அவை அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு கொண்டுவரப்படும் என அரசாங்கத்திடம் உறுதியளித்திருந்ததாகவும் அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதற்கிடையில், வெள்ளை நிறத்திலுள்ள இந்த விசேட பயன்பாட்டுத்திறன் மிக்க வாகனங்களை விடுதலைப் புலிகள் அவர்களது மனிதாபிமான நோக்கங்களுக்காகப் பாவிக்க தீர்மானித்தால், எல்லா விசேட பயன்பாட்டுத்திறன் மிக்க வாகனங்களும் படையினரின் தாக்குதலுக்கு இலக்காகலாம் என கொழும்பிலுள்ள அரசசார்பற்ற நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.


இதற்கிடையில், அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் எஸ்.பீ. திவாரத்ன, வன்னிப் பிராந்தியத்தில் கடமையில் ஈடுபட்டுள்ள சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களுக்கான எரிபொருள் விநியோகத்திற்கு கட்டப்பாடுகளை விதிக்க தீர்மானித்துள்ளார்.


அத்துடன், விடுவிக்கப்படாத பகுதிகளில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள், அங்கு பயன்பாட்டிலுள்ள வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் தொடர்பான சகல விபரங்களையும் தமக்கு சமர்ப்பிக்குமாறு சில சர்வதேச அரசார்பற்ற நிறுவனங்களுக்கு திவாரத்ன அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

"வடக்கில் விடுவிக்கப்படாத பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் இராணுவ நடவடிக்கைகளின் காரணமாக, அப்பிரதேசங்களில் உள்ளூர் மற்றும் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களால் முன்னெடுக்கப்படும் திட்டங்களை முன்கொண்டு செல்லமுடியாதிருப்பதாக அறியக்கிடைக்கிறது.


மேலும், இந்நிறுவனங்களுக்கு சொந்தமான பெருமளவான வாகனங்கள, இயந்திரங்கள் என்பவற்றை விடுதலைப் புலிகள் பயன்படுத்துவதாகவும் தெரியவருகிறது. இந்நிலையில், கடமையில் ஈடுபட்டுள்ள நிறுவனத்திற்கு எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்வதற்கு மேற்படி தகவல்கள் தேவைப்படுகின்றன" என்றும் திவாரத்ன அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: