வடக்கில் இடம்பெற்றுவரும் மோதல்களில் முல்லைத்தீவு மாவட்டம் கல்விளான் பகுதியை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்திருப்பதாக இலங்கை இராணுவம் நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளது.
கல்விளான் பகுதியை விடுதலைப் புலிகள் இழந்தமையானது அவர்களுக்கு மிகவும் முக்கியமான இடங்களாக விளங்கிவரும் மல்லாவி மற்றும் துணுக்காய் பகுதிகளுக்கு இராணுவத்தினர் முன்னேறாமல் தடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை இல்லாமல் செய்துள்ளது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேநேரம், கிளிநொச்சியின் தென்மேற்கு எல்லைப் பகுதியில் மோதலில் ஈடுபட்டுவரும் விசேட படையினர் முழங்காவில் பகுதியைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இராணுவ முன்னெடுப்புக்கள் இடம்பெற்றுவரும் பகுதிகளில் பாரிய மனிதப் பேரவலம் ஏற்படும் சூழ்நிலையொன்றை ஏற்படுத்துமாறு விடுதலைப் புலிகளின் தலைவர் உத்தரவிட்டிருப்பதாக வன்னியிலுள்ள வட்டாரங்களை மேற்கோள்காட்டி பாதுகாப்பு அமைச்சு தனது இணையத்தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.
விடுவிக்கப்படாத பகுதிகளிலுள்ள அரசசார்பற்ற நிறுவனங்கள், அரசாங்க அலுவலகங்கள் மற்றும் வைத்தியசாலைகளின் வாகனங்களைப் பயன்படுத்தி பொதுமக்களை மோதல்கள் இடம்பெறும் முன்னரங்கப் பகுதிகளுக்கு அனுப்பிவைப்பதற்கு இன்னும் சில தினங்களில் விடுதலைப் புலிகள் நடவடிக்கை எடுக்கவிருப்பதாக தமக்கு தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், பாதுகாப்புத் தரப்பினரின் இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விடுதலைப் புலிகள் சார்பிலிருந்து இதுவரை எந்த பதில் கருத்துக்களும் வெளியிடப்படவில்லை.
இதேவேளை, இலட்சியத்தை நோக்கிய தமது விடுதலைப்போரில் இழப்புக்கள் ஏற்பட்டாலும், விடுதலைக்காக தாம் தொடர்ந்து போராடுவோம் என விடுதலைப் புலிகளின் வடபோர் முனை கட்டளை தளபதி கேணல் தீபன் கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோது கூறியதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment