Wednesday, 13 August 2008

சிங்கள இராணுவம் முதல் துப்பாக்கிச் சூட்டை நடத்திய , 25-வது ஆண்டு தினம் - கருப்புக் கொடி ஏற்றி தமிழக மீனவர்கள் கண்டனம்!

தமிழக மீனவர்களை தாக்கி வரும் சிங்கள இராணுவத்தை எதிர்த்து இன்று கருப்புக் கொடி ஏற்றி கண்டனம் தெரிவிக்குமாறு தென்னிந்திய மீனவர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து சங்கத்தின் தலைவர் கு.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

இலங்கை கடற்படையின் அத்துமீறல்களாலும் அட்டூழியங்களாலும் தொடர்ந்து தமிழக புதுவை மீனவர்கள் உயிர்களை இழந்தும், உடமைகளை இழந்தும் வருகின்றனர். இலங்கை கடற்படையின் மனித உரிமை மீறல்களால் 300க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியா- இலங்கை நாடுகள் 1974, 76 ஆண்டுகளில் கச்சத்தீவு பாக் நீரிணைப்பு மற்றும் மன்னார் வளைகுடா கடல் எல்லைகளுக்கான ஒப்பந்தங்களுக்குப் பிறகு தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை முதல் துப்பாக்கி சூட்டை 13-08-1983ஆம் ஆண்டு நடத்தியது.

இந்தியா முழுவதும் கண்டனக் குரல் எழுப்பியிருக்க வேண்டிய அன்றைய தினம் பலரும் அறியாமலேயே சென்றதால் 25 ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் மீது மனித உரிமை மீறல்களுக்கான படுகொலையை இலங்கை கடற்படை இன்றும் தொடர்கிறது.

சிங்கள ராணுவம் தமிழக மீனவர்கள் மீது முதல் துப்பாக்கிச் சூட்டை நடத்திய 25-வது ஆண்டு நினைவு தினம் இன்று (13-08-2008) வருகிறது. தமிழக மீனவர்களை கொன்று குவித்த சிங்கள ராணுவத்தின் மனித உரிமை மீறல்களை கண்டித்து அன்றைய தினம் மீனவ மக்கள் கறுப்புகொடி ஏற்றியும், கறுப்பு முத்திரைகள் அணிந்தும் தங்களது எதிர்ப்புகளை இலங்கை அரசுக்கு தெரிவிக்க வேண்டுகிறோம்.

மேலும் இன்றைய தினம் சிங்கள ராணுவத்தை கண்டித்து கண்டன தெருமுனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் ராஜ்மோகன் சி.பி.ஐ., டி.எஸ்.எஸ்.மணி (மனித உரிமைகள் அமைப்பாளர்), மீனவர் தலைவர் கு.பாரதி உள்பட பலர் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: