Sunday, 3 August 2008

இந்தியப் பிரதமர் சந்திப்பு விவகாரம்: மகிந்த - பிள்ளையான் முறுகல்

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் தன்னை சந்திக்க ஏற்பாடு செய்யவில்லை என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மீது துணை இராணுவக்குழு தலைவர் பிள்ளையான் சீற்றமடைந்திருக்கின்றார் என்று கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் தெரியவருவதாவது:-

சார்க் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கொழும்பு சென்றுள்ள இந்தியப் பிரதமருடனான சந்திப்புக்கு எப்படியும் ஏற்பாடு செய்யுமாறு துணை இராணுவக்குழு தலைவர் பிள்ளையான், சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் கோரியிருந்தார்.

இதன் பிரகாரம், அரச தலைவர் மகிந்தவும் தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டு, சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய முயற்சித்து பார்த்தார்.

ஆனால், இந்திய அரச உயர்மட்டத்தினர் இந்தக்கோரிக்கையை நிராகரித்ததுடன், தமது அரசின் உயர்மட்ட அதிகாரிகள் இருவரை பிள்ளையான் குழுவினருடன் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்வதாக அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக பிள்ளையான் தரப்புக்கு அறிவிக்க, இந்தியப் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்யாததால், இந்திய தரப்பிலிருந்து எவரையும் தான் சந்திக்கப்போவதில்லை என்று சீற்றமடைந்திருக்கிறார் பிள்ளையான்.

தமக்கு இது விடயத்தில் பாரிய ஏமாற்றம் ஏற்பாட்டிருப்பதாக கூறியுள்ள பிள்ளையானுக்கும் அரச தலைவர் மகிந்தவுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: