Sunday, 3 August 2008

இலங்கை தொடர்பான அமெரிக்க காங்கிரசின் பிரேரணைக்கு மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆதரவு

இலங்கையில் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவை அனுமதிக்க வேண்டும் என்ற அமெரிக்க காங்கிரசின் பிரேரணைக்கு ஆதரவு வழங்க சர்வதே மனித உரிமைகள் கண்காணிப்பகம் தீர்மானித்துள்ளது.

விடுதலைப் புலிகளாலும், இலங்கை அரசாங்கத்தாலும் மீறப்படும் மனித உரிமைகளைக் கண்காணிப்பதற்கு சர்வதேச கண்காணிப்பாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என அமெரிக்க காங்கிரஸ் அண்மையில் பிரேரணையொன்றை முன்வைத்திருந்தது. இந்தப் பிரேரணைக்குப் பூரண ஆதரவு வழங்குவதாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

“சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படவேண்டும் என்பதை நாங்கள் விசேடமாக வரவேற்பதுடன், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் பதிலளிக்கவேண்டும். 25 வருடங்களுக்கு மேலாக இலங்கையில் இடம்பெற்றுவரும் வன்முறைகளால் ஏற்பட்ட மனித உரிமை மீறல்களை அமெரிக்கா நீண்டகாலம் கவனத்தில் கொள்ளாதிருந்துவிட்டது” என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சட்ட மற்றும் கொள்கைப் பணிப்பாளர் ஜேம்ஸ் றோஸ் கூறியுள்ளார்.

“இலங்கையில் அதிகரித்துச் செல்லும் மனித உரிமைகள் தொடர்பாக அமெரிக்க காங்கிரஸ் கவனம் செலுத்தியுள்ளது என்பதை இந்தப் பிரேரணை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கொழும்பு சரியான நடவடிக்கைகளை மேற்கோள்ளவேண்டும். பொய்யான வார்த்தைகள் இனியும் தேவையில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கைகள் தொடர்பாக பல்வேறு சுயாதீன அமைப்புக்கள் அமெரிக்க காங்கிரசின் வெளிவிவகாரக் குழு உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் அதிகரித்திருக்கும் மனித உரிமைகளைக் கண்காணிப்பதற்கு சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு நிறுவப்படவேண்டும் எனக் கோரி காங்கிரஸ் உறுப்பினர் பிரட் ஷேர்மன் மற்றம் ப்ராங் ப்லன் ஆகியோர் காங்கிரஸ் சபையில் பிரேரணையொன்றை முன்வைத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments: