Saturday, 9 August 2008

கொழும்பில் இருந்து அடியாட்கள் - அனுராதபுரத்தில் தேர்தல் வன்முறைகள் - ஜனக்க பெரேரா

கொழும்பில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட அடியாட்களை கலாவௌ மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான அரச விடுமுறை விடுதிகளில் தங்கவைத்து அவர்களை, அரசாங்கம் அனுராதபுரத்தில் தேர்தல் வன்முறைகளில் ஈடுபடுத்தி வருவதாக ஐக்கிய தேசிய கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் ஜனக்க பெரேரா தெரிவித்துள்ளார்.


அரசாங்கம் மேற்கொண்டு வரும் வன்முறைகளுக்கு எதிராக அனைவரும் கட்சி பேதமின்றி ஒன்றிணைய வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அனுராதபுரம் மஹாவீதியில் உள்ள ஐக்கிய தேசிய கட்சியின் அலுவலகம் மீது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து பேசிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.


காவற்துறையினரின் சீருடையை அணிந்த 5 பேர் ஐக்கிய தேசிய கட்சியினர் மீதும், கட்சியின் ஆதரவாளர்கள் மீதும் தாக்குதல்களை நடத்துவதாக அவர் குற்றம்சுமத்தினார். எனினும் காவற்துறையினர் அவர்களுக்கு எதிராக இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.


ஐக்கிய தேசிய கட்சி அலுவலகம் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் காவல் நிலையம் இருந்த போதிலும் கூட்டமைப்பின் அடியாட்கள் நேற்று (08) தமது அலுவலகத்தை தாக்கிய போது காவற்துறையினர் அதனை தடுக்கவில்லை எனவும் ஜானக்க பெரேரா கூறியுள்ளார்.


இந்த அடியாட்கள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் வடமத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திசாநாயக்க ஆகியோரின் ஆலோசனைகளின்படி செயற்பட்டு வருவதாகவும் ஜானக்க பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

No comments: