Saturday, 9 August 2008

நூல் வெளியீட்டுத் திணைக்களம் மேலதிக பாடநூல்கள் அச்சிடப்பட்டமைக்கு யார் பொறுப்பு?--5 கோடி இழப்பு

நூல் வெளியீட்டுத் திணைக்களம் தேவைக்கு மேலதிகமாக அச்சிடப்பட்ட 25 இலட்சம் இலவச பாடநூல்கள் மீண்டும் அரைத்து கடதாசியாக்கும் பொருட்டு கடதாசி ஆலைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளன.


இந்தப் பாடநூல் தொகையின் பெறுமதி ஐந்து கோடி ரூபாவென தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடத்தில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய பாடப் புத்தகங்களை சேமிப்பதற்காக

களஞ்சியசாலையில் இடத்தை ஒதுக்கும் பொருட்டு இந்த மேலதிக புத்தகத் தொகையை அடுத்த வாரத்தில் வாழைச்சேனை கடதாசி ஆலைக்கு அனுப்பிவைக்குமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கல்வி வெளியீட்டுத் திணைக்களத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.


பாடநூல்களை அச்சிடுவதற்கு பொறுப்பான அதிகாரிகளின் பொறுப்பற்றதும் தூரநோக்கற்றதுமான செயற்பாடுகளால் ஐந்து கோடி ரூபா வீண் விரயமாக்கப்படும் நிலைமை உருவாகியுள்ளது. இந்த இழப்பை யார் ஈடு செய்யப்போகின்றனர்?


தேவைக்கு அதிகமாக பாடநூல்களை அச்சிடும் போக்கு கடந்த பல வருடங்களாகவே இடம்பெற்று வருவது தொடர்பாக பொறுப்புக்குரிய அதிகாரிகளிடம் உடனடியாக விசாரணை நடத்துமாறும் அந்த அதிகாரிகள் ஓய்வுபெற்றிருந்தால் அவர்களிடமிருந்து இந்த இழப்பீட்டை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் கல்வி அமைச்சர் தமது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இது நல்ல செய்திதான்.

ஆனால், தேவைக்கு அதிகமாக பாடப் புத்தகங்கள் பெருந்தொகையாக அச்சிடப்பட்டுவருவதை உரிய அதிகாரிகளால் ஏன் இதுவரையில் கண்டுபிடிக்க முடியாமல் போனது என்ற கேள்வி எழுகிறது.


அதிகாரிகளுக்கு தெரியாமலிருந்ததா அல்லது தெரிந்திருந்தும் அவர்கள் கண்டுகொள்ளமலிருந்தனரா? இந்த மேலதிக புத்தகங்கள் அச்சிட அனுமதி வழங்கியது யார்? இதற்குரிய நிதியை ஒதுக்கிக் கொடுத்தது யார்? என்பன போன்ற பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

இக்கேள்விகளுக்கு கல்வி அமைச்சர் பதிலைத் தேடியே ஆகவேண்டியுள்ளது.

No comments: