Saturday, 2 August 2008

பறிபோகும் நிலைமையில்.....ஜி.எஸ்.பி. சலுகை

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் "ஜி.எஸ்.பி. பிளஸ்' எனப்படும் வர்த்தகச் சலுகை நீடிக்கப்படுமா என்ற பலமான சந்தேகம் தோன்றிவிட்டது. கடந்த பல மாதங்களாகவே இந்தச் சந்தேகம் இருந்து வந்தது.

ஆனால் கடந்த 20ஆம் திகதி ?தல் 25ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து நிலைமைகளை அவதானித்த றொபெட் இவான்ஸ் தலைமையிலான ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள், இந்தச் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தி அரசாங்கத்துக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.

"ஜி.எஸ்.பி. பிளஸ்' வர்த்தகச் சலுகையை நீடிப்பது தொடர்பாக ஆராயவே, றொபேட் இவான்ஸ் தலைமையிலான ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்ற பிர திநிதிகள் குழு இலங்கைக்கு வந்திருந்தது. கடந்த 2006ஆம் ஆண்டில் முதல் முறையாக இந்தச் சலுகை யைப் பெற்றிருந்தது இலங்கை. ஆனால் இந்த வருடத்துடன் இந்தச் சலுகைத் திட்டம் நிறைவடைகிறது.

மூன்று வருடங்களுக்கு ஒருமுறை இது புதுப்பிக்கப்படும். 2009ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரையான 3 ஆண்டு களுக்கு இந்தச் சலுகையை நீடிக்க வேண்டும் என்று இலங்கை அரசாங்கம் பல்வேறு மட்டங்களில் இருந்தும் வேண்டுகோள்களை விடுத்து வருகிறது. ஆனால்,

ஐரோப்பிய ஒன்றியமோ இலங்கையில் நிலவும் மனிதஉரிமை மீறல்களைக் கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே ஜி.எஸ்.பி. சலுகையை தொடர முடியும் என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.

இலங்கையின் மனித உரிமைகள் நிலை தொடர்பாக சர்வதேமட்டத்தில் மிகவும் மோசமான அபிப்பிராயங்களே இருந்து வருகின்றன. இந்தநிலையில் இலங்கைக்கு இந்தச் சலுகை நீடிப்புக் கிடைக்க வாய்ப்பே இல்லை என்று சில மாதங்களாகவே பேச்சடி பட்டு வருகிறது.

இதனால் கலக்கமுற்ற இலங்கை அரசாங்கம் இராஜதந்திர வழிமுறைகள் அனைத்தையும் கையாண்டு மன்றா டிப் பார்த்தது. ஜே.வி.பி. கூட பிரசாரத்தை மேற்கொண்டது. ரணில் விக்கிரமசிங்கவும் கோரிக்கை விடுத்தார். ஆனால், ஐரோப்பிய ஒன்றியமோ தமது நிலைப்பாட்டில் இருந்து விலகவில்லை.

இந்தநிலையில், தமது பிரதிநிதிகள் குழுவை அனுப்பி களநிலையை நேரில் ஆய்வு செய்துவிட்டு சலுகை நீடிப்புத் தொடர்பான முடிவை எடுப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருந்தது. இதன் அடிப்படையில் களநிலை ஆய்வுக்காக வந்ததே றொபெட் இவான்ஸ் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவாகும்.

இந்தக் குழுவின் வருகை மற்றும் அது தொடர்பான சர்ச்சைகள் தொடர்பாகப் பார்க்க முன்னர், ஜி.எஸ்.பி. பிளஸ் குறித்து சற்றுப் பார்த்து விடலாம்.

"ஜி.எஸ்.பி பிளஸ்' என்பது ஐரோப்பிய ஒன்றியத்தினால் வறிய நாடுகளுக்கு வழங்கப் படுகின்ற ஒரு ஏற்றுமதிச் சலுகையாகும். அதா வது ஐரோப்பிய ஒன்றியத்துக்கு தீர்வைகள், வரிகள் இல்லாமல் இந்தச் சலுகையைப் பயன்படுத்தி ஏற்றுமதிகளைச் செய்ய முடியும்.

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு இது ஒரு பெரும் வரப்பிரசாதமாகும்.

178 நாடுகள் இந்தச் சலுகைப் பட்டியலில் உள்ளன. வருடாந்தம் 52 பில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான இறக்குமதிகள் இதனடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்தி னால் செய்யப்படுகின்றன.

இலங்கையைப் பொறுத்தவரையில் தைத்த ஆடை உற்பத்தித்தொழில் முடங்கிப் போகும் கட்டத்தில் இருந்தபோது, அதற்குக் கைகொடுத் தது இந்தச் சலுகைதான். சுமார் மூன்று இலட்சம் ஆடை தயாரிப்புத் தொழிலாளர்கள் நேரடியாக இந்தச் சலுகையில் தங்கியிருக்கின்றனர்.

அதைவிட சுமார் 7200 பொருட்கள் இலங்கையில் இருந்து இந்தச் சலுகையைப் பயன்படுத்தி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும். இதன் மூலம் இலங்கைக்கு வருடாந்தம் 2.9 பில்லியன் டொலர் வருவாய் கிடைத்து வருகிறது. இந்தச் சலுகையை இலங்கை இழக்குமேயானால் இலட்சக் கணக்கானோர் வேலையிழப்பை எதிர்நோக்குவ தோடு நாட்டின் பொருளாதாரமும் ஆட்டம் காணும்.

இது இலங்கை அரசாங்கத்துக்கும் நன்கு தெரியும்.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் தெரியும். ஆனாலும் ஐரோப்பிய ஒன்றியம் இந்தச் சலுகையை வழங்குவ தற்கு மனித உரிமைகள் நிலையை ஒரு முக்கிய மான கணிப்பீடாக வைத்திருக்கிறது. இலங்கை அரசாங்கத்துக்கு 2006ஆம் ஆண்டில் இந்தச் சலுகை கிடைத்ததற்கு ஒரே காரணம் அப் போது நடைமுறையில் இருந்த போர்நிறுத் தமே என்பதில் சந்தேகம் இல்லை.

2005ஆம் ஆண்டில் இது தொடர்பாக பரிசீலனை செய்யப்பட்டபோது, இலங்கையின் மனித உரிமைகள் நிலை மோசமாக இருந் தாலும் இது போர்நிறுத்தத்தை வலுப்படுத்த உதவும் என்ற நோக்கில்தான் ஐரோப்பிய ஒன்றியம் இந்தச் சலுகையை வழங்கியிருந்தது.

ஆனால், இப்போது போர்நிறுத்தம் இல்லை, மனித உரிமை மீறல்களும் உச்சத்துக்குச் சென்று விட்ட நிலையில் இந்தச் சலுகை நீடிப்பு என்பது குதிரைக் கொம்பாகவே மாறிவிட்டது.

அதிலும் இலங்கை களநிலை ஆய்வுக்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு வெளியிட்டிருக்கின்ற கருத்துக்கள் அரசாங்கத்துக்குப் பெரிதும் சீற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கைக்கான விஜயத்தின் முடிவில் கடந்த 25ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

கொழும்பு ஜெய்க் ஹில்டன் ஹோட்டலில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில், இந்தக் குழுவின் தலைவரான றொபேட் இவான்ஸ், தாம் இலங்கையில் நேரில் அவதானித்த சந்திப்புகளின் போது அறிந்து கொண்ட விடயங்களின் அடிப்படையில் கருத்துகளை முன்வைத்திருந்தார்.

பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற போர் வையில் அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பொதுமக்களைப் பெரிதும் பாதித்துள்ளது. மனித உரிமைகள் பாதுகாப்பு விடயத்தில் இலங்கை அரசு மேலும் அக்கறை எடுக்கவேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

அத்துடன், ""பொதுமக்கள் மத்தியில் பயங்கரப் பீதியை ஏற்படுத்தியிருக்கும் ஆட்கடத்தல்களை ?டிவுக்குக் கொண்டுவர அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசபடைகள் நாட்டின் சட்டத்தை மீறும் சம்பவங்களை முற்றாக ஒழிக்க அரசாங்கம் முன்னுரிமை கொடுக்க வேண்டும் சட்டத்தை பாதுகாக்க வேண்டிய அரச படைகளின் தன்னிச்சையான நடவடிக்கைகள் அப்பாவி மக்களைப் பெரிதும் பாதித்துள்ளன.

அரசபடையினர் 500 பேருக்கு எதிராக இப்படியான முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளபோதும், அவர்களில் 100 பேருக்கு எதிராக மட்டுமே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால்,அவர்களுக்கு தண்டனை வழங்கப் பட்டதாக எந்த ஆதாரமும் இல்லை.

ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகைகளை வழங்குவ தற்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை இலங்கை அரசு நிறைவு செய்யவேண்டும்.

இல்லாவிடின், குறிப்பிட்ட சலுகையை இழக்க வேண்டிவரும்.

ஊடகவியலாளர்கள் தொடர்ந்து துன்புறுத் தப்பட்டு வருகின்ற சூழ்நிலையை அறிந்து கொள்ள முடிந்தது.

அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது தொடர்பாக அனைத்து கட்சிகளின் அமைப்பு ஒன்று அமைக்கப்பட்டுள்ளபோதும், அதன் மூலம் இன்றுவரை எந்தவிதமான முன்னேற்றகரமான முடிவும் எடுக் கப்படவில்லை.

13ஆவது அரசமைப்பு திருத்தத்தை நடை முறைப்படுத்தி அரசமைப்பு சபை மற்றும் சுதந் திர ஆணைக்குழுக்களை அமைப்பது தற் போதைய நிலையில் மிகவும் அவசியமானது.

திருகோணமலைக்கு எமது குழு செல்ல முடியவில்லை. இறுதிநேரத்தில் பயணம் ரத்துச் செய்யப்பட்டது. பயண ஒழுங்கில் ஏற்பட்ட குழப்பங்களால் திருமலைக்கான விமானப் பயணம் ரத்துச் செய்யப்பட்டது.

திரும்பத் திரும்ப உறுதிமொழிகள் வழங்கப்பட்ட போதும் முடிவில்லாத சிக்கல்களின் விளை வால் எமது குழுவினர் இரத்மலானை விமான நிலையத்திலிருந்தே திரும்பவேண்டி ஏற்பட் டது. பல மாதங்களாக மேற்கொண்ட ஆயத்தங் கள், காலம், செலவினம் யாவும் வீணாகி விட்டது.

இலங்கையில் மிகவும் பதற்றமான நிலை இரு ப்பதை தூதுக்குழு விளங்கிக் கொண் டுள்ளது.

அரசு எதிர்நோக்கும் பொதுவான சிக்கலை தீர்ப்பதற்கு இவை மிகவும் முக்கியமானவை, ஜி.எஸ்.பி. சலுகையை நீடிப்பது இன்னமும் அரசின் கைகளிலேயே உள்ளது'' என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்தக் கருத்துகளின் அடிப்படையில்,

ஜி.எஸ்.பி. சலுகையைப் பெறுகின்ற தகுதி இப் போது இலங்கை அரசாங்கத்துக்குக் கிடையாது என்பதே அவர்களின் கருத்தாக உள்ளது. மனித உரிமை நிலைவரத்தை மேம்படுத்த அரசாங்கம் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்ட கருத்தானது, அரசாங்கத்தின் இப்போதைய அணு குமுறைகள் மோசமாக இருக்கின்றது என்பதையே அர்த்தப்படுத்து கிறது.

இந்தக் கருத்துகள் இலங்கை அரசாங்கத்தைப் பெரிதும் சினமூட்டியிருக்கிறது. அதிலும் திருகோணமலைக்குச் செல்வதில் ஏற்பட்ட இழு பறியால் அந்தப் பயணம் கைகூடாமல் போன தையிட்டு அரசாங்கம் பெரிதும் ஏமாற்றமடைந்தது.

இதற்குக் காரணம் திருகோணமலையில் தான் கிழக்கு முதல்வர் சந்திரகாந்தனுடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. றொபேட் இவான்ஸ் தாம் கிழக்கு முதலமைச்சரை சந்திக்க ஆர்வத்துடன் இருந்ததாகக் குறிப்பிட்ட போதும், அரசாங்கமோ இது திட்டமிட்ட தவிர்ப்பாக இருக்குமோ என்றே சந்தேகிக்கிறது.

திருகோணமலைப் பயணம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளின் கருத்து குறித்தே அரசாங்கம் காட்டமான பதிலடியைக் கொடுத்திருக்கிறது. ஆனால் ஒட்டு மொத்தமாக இலங்கையின் மனித உரிமைமீறல்கள் தொடர்பாக, ஆட்கடத்தல்கள் தொடர்பாக, அரசியல் தீர்வு தொடர்பாக முன்வைக்கப்பட்ட கருத்துகளை இங்கு அரசாங்கம் விமர்சிக்க முனைய வில்லை.

கண்ணாடி வீட்டில் இருந்து கல்லெறியப் பயந்தே அவ்வாறு செய்யவில்லை என்று தெரிகிறது. திருகோணமலைப் பயணத்துக்கான ஏற்பாடுகளில் குழப்பம் விளைவித்தது யார் என்பதில்தான் சர்ச்சை தொடர்கிறது.

இந்தநிலையில் அரசாங்கத்தின் சார்பில் கடந்த 26ஆம் திகதி செய்தியாளர்களிடம் பேசிய வெளிவிவகார அமைச்சர் றோகித போகொல்லாகம, ஐரோப்பிய ஒன்றிய பிரதி நிதிகள் ஒரு வட்டத்துக்குள் இருந்து இயங்கும் சிலரால் தவறாக வழி நடத்தப்பட்டதாகவும் அதனடிப்படையிலேயே அவர்களின் கருத்து அமைந்துள்ளதாகவும் குற்றம்சாட்டியதுடன், களநிலவரத்தை சில நாட்கள் தங்கிய அவர்களால் சரியாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருடனான சந்திப்புக்களை மனதில் கொண்டே அரசாங்கம் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியிருக்கிறது.

அரசாங்கத்தின் குற்றச்சாட்டுக்களுக்கு பி.பி.சி செவ்வியில் பதிலளித்த றொபெட் இவான்ஸ், தாம் தீரவிசாரித்தறிந்தவற்றையே கூறியதாக வும் அரசாங்கத்தின் மீதான விமர்சனங்கள் ஆக்கபூர்வமானவையே தவிர, சேற்றை வாரும் நோக்கம் கொண்டதல்ல என்றும் சுட்டிக்காட்டி யிருக்கிறார்.

ஆனால், திருகோணமலைப் பயணத்தை தவிர்த்தது ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் தான், என்ற வகையில் அரசாங்கம் தெரிவித்த குற்றச்சாட்டுத் தொடர்பாக இவர் எந்தப் பதிலையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரை யில், கடந்த இரண்டு ஆண்டுகளில் களநிலவ ரம் அறிய வந்த ஐ.நா.வின் உயர்நிலை ஆணை யாளர்கள் பலரையும், பயங்கரவாதி என்றும் புலிகளின் "ஏஜென்ட்' என்றும், அவர்களிடம் இலஞ்சம் பெற்றவர்கள் என்றும் வாய் கூசாமல் குற்றம்சாட்டிப் பழக்கப்பட்டு விட்டது.

இலங்கைக்கு வரும் வெளிநாட்டு மனித உரிமை அமைப்பு பிரதிநிதிகளோ கள நிலை அறியவரும் அதிகாரிகளோ, அரசாங்கத்துக்கு சார்பான கருத்தை தெரிவிக்க வேண்டும்.

அல்லது இப்படித்தான் மோசமான விமர்சனங் களைச் சகிக்கும் மனப்பக்குவத்தைக் கொண்டி ருக்க வேண்டும் என்ற நிலை வந்துவிட்டது.

ஐ.நா.வாகட்டும் ஐரோப்பிய ஒன்றியமாகட் டும் எவர் வந்தாலும் இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்களை கண்டும் காணாமல் செல்ல வேண்டும். போரைத் தட்டிக் கொடுத்து வரவேற்க வேண்டும் என்றே அரசாங்கம் கருதிக் கொண்டிருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியக் குழுவின் கருத்தானது பே?னவாதக் கட்சிகளை அதிர்ச்சியில் உறைய வைத்துவிட்டது. தற்போதைய நிலையில் ஜி.எஸ்.பி சலுகை கிட்டத்தட்ட பறிபோகும் நிலைக்கு வந்து விட்டதாகவே தோன்றுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தை இதுவரையில் திருப்திப்படுத்தத் தவறியுள்ள இலங்கை அரசாங்கத்துக்கு ஜி.எஸ்.பி சலுகை நீடிப்பு கிடைக்காவிட்டால் அது கடும் பாதிப்பாகவே அமையும்.

No comments: