10 நாள் போர் நிறுத்தம் முடிந்ததும், விடுதலைப் புலிகள் பாரிய படை நகர்வொன்றை மேற்கொள்ளப் போகிறார்கள் என எந்த எழுத்தாளரும் எழுதவில்லை.
நிழல் யுத்தம் செய்வதற்கு மாயமான்களை தேடுவது போல் தனியார் இணையத்தளமொன்றில் எம்மையெல்லாம் மிக கீழ்த்தரமாக விமர்சித்து, இறைவனின் குசும்பொன்று ஊர்ப் புதினத்தில் வந்தது.
இத்தகைய அலட்டல்களை ஒரு புறம் ஒதுக்கி, எமது பணியை இன்னமும் வேகமாக முன்னெடுப்போம்.
ஒருதலைப்பட்ச போர் நிறுத்தப் பிரகடனம் மிகவும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்ட காலமறிந்த, இராஜதந்திர நகர்வாகும். ஓகஸ்ட் 4 ஆம் திகதி நள்ளிரவன்று பெரும்யுத்தமொன்றை விடுலைப் புலிகள் ஆரம்பிப்பார்களென்று தேசிய உணர்வு கொண்ட ஆய்வாளர்கள் எவருமே கூறவில்லை. இத்தகைய எதிர்பார்ப்பு சிங்கள தேசத்திற்கு இருக்குமென விடுலைப்புலிகளின் அரசியல் அறிவிற்கும் புரியும்.
பத்தி எழுத்தாளர்களின் அரசியல் ஆய்வுகளை அப்படியே ஏற்றுக் கொண்டு யுத்தம் புரிபவர்கள் அல்லர் விடுதலைப் புலிகள். அதாவது சமகால கள யதார்த்தம் புரிந்தவர்கள், அதை நேரில் தரிசிப்பவர்கள் மட்டுமே. அரசியல் விமர்சனமோ அல்லது ஆய்வோ செய்யும் உரித்துடையவர் என்று கருதினால் சர்வதேபரப்புரையை மூட்டை கட்டி ஒரு ஓரமாகப் போட்டு விடலாம்.
அடுத்த வாரம் வன்னி அதிரப் போகின்றதென பரபரப்புச் செய்திகளை அள்ளி வீசுவதே, மக்களை முட்டாள்கள் ஆக்கும் அரசியல் அறிவிலித்தனத்தைக் காட்டுகிறது.
தற்போதைய சார்க் ஒன்றுகூடலில் ஒரு விடயத்தை உன்னிப்பாக அவதானிக்கலாம்.
தோளில் தொங்கிய துண்டை இடுப்பில் கட்டியபடி மிக பவ்வியமாக, இந்தியாவைப் புகழும் சிங்கள தேசத்தின் அதிரடிப் போக்கினைப் பார்க்கின்றோம்.
சிறிய அணுமின் உற்பத்தி நிலையங்களை இந்தியாவின் உதவியுடன் தெற்காசிய நாடுக ளில் நிறுவும் முயற்சியொன்று முடுக்கிவிடப்பட்டுள்ளது.
அதாவது, உருவாகும் இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தினால் கிடைக்கப்பெறும் அனுகூலங்களை, தமக்குச் சாதகமாக பயன்ப டுத்த இலங்கை முனையும் அதேவேளை, இந்தியா ஊடாக அமெரிக்காவுடன் ஒருவித சமரசத்தையும் நட்பையும் பேண முடியுமென்றும் சிங்கள தேசம் கணிப்பிடுகிறது.
ஒரே கல்லில் பல மாங்காய்கள். ஆனாலும் இலங்கையை, முற்றுமுழுதாக தனது பொருளா தாரப் பிடிக்குள் கொண்டு வந்தால், சீனப்பக்கம் சாயும் சிங்களதேசத்தின் நகர்வுகளை நிறுத்தலா மென்பதே இந்தியாவின் நிகழ்காலத் தந்திரோ பாய அரசியல் உத்தியாகும்.
தமிழ் மக்கள் விரும்பும் தீர்வினை கொடுக்கும்படி சிங்கள தேசத்தை இந்தியா வற்புறுத் தும்வரை, இந்த இந்தியஇலங்கை தேனிலவு நீடிக்கும்.
தற்போது வன்னிக் களமுனையில் ஏற்படும் புலிகளின் பின்னகர்வுகளால் இலங்கை அரசாங்கத்தின் இந்திய நெருக்கம் அதிகரிக்கி றது.
10 ஆயிரம் படையினர் மேலதிகமாகத் தேவைப்படுவதாக இராணுவத் தளபதி விடுக்கும் வேண்டுகோளில், இழப்புகளின் பரிமாணங்களும் தென்படுகின்றன. கடந்த சில நாட்களாக மன்னார் முன்னரங்குகளில் நகர்வற்ற நிலையொன்று காணப்படும் அதேவேளை பின் தளங்களிலிருந்து முன்னோக்கி படைக்கல ஆளணி குவிப்பினை இராணுவம் மேற்கொள்ளும் நிலை தொடர்கிறது.
படையினரின் இரு வளமும் கைப்பற்றப்பட்ட இடங்களில் செறிவாகக் காணப்படும் நிலை வரை, தடுத்து நிறுத்தும் உபாயங்கள் பிரயோகிக்கப்படலாம்.
பொதுவாக அரச தரப்பு விடும் அறிக்கைகளில், முல்லைத்தீவின் சில பகுதிகளை தாம் பிடித்து விட்டோமென்று குறிப்பிடும்போது தமிழ்மக்கள் அதிர்ச்சியடைந்து விடுகின்றனர். முல்லைத்தீவு எனும்போது புதுக்குடியிருப்புதான் எல்லோரினது நினைவிற்கு வரும்.
ஆனால், இந்த வவுனிக்குளம்,மல்லாவி போன்ற இடங்களில், ஏ9 பாதையில் மேற்குப் புறத்திலுள்ள மன்னார் மாவட்ட எல்லையில் இருப்பது பலருக்குப் புரியாது.
ஆகவே இத்தகைய செய்தியை வெளியிடும்போது, நில வரைப்ப டத்தோடு அவர்கள் குறிப்பிடும் இடங்களை புள்ளியிட்டால் தெளிவாக இருக்கும்.
அதேவேளை, வவுனியாவின் வடக்கேயுள்ள பாலமோட்டையில் பல மாதங்களாக மோதல் நீடிக்கிறது. இரண்டு நாட்களில் 10 கிலோ மீட்டரை விடத்தல் தீவிலிருந்து கடந்த இராணு வம், பாலமோட்டையில் நகர முடியாமல் தவிக்கிறது.
இம்முனையிலும் பல்குழல் எறிகணைகள், ஆட்டிலெறிகள் சகிதம் பெரும் சமர் நிகழ்ந்தா லும், படையினரால் எதிர்பார்க்கப்பட்டது போல முன்னகர்வு முடியவில்லை.
இதைப் புரிந்து கொள்ள பாரிய அரசியல் ஞானமோ அல்லது போரியல் புரிதலோ தேவைப்படாது.
அதாவது இராணுவத்தை முன்னகர விடுவ தும், சில இடங்களில் நகர விடாமல் தடுப்ப தும், விடுதலைப் புலிகளின் போரியல் நிகழ்ச்சி நிரலின் பிரகாரமே நடக்கிறது என்பதை சராசரி மக்களும் தற்போது புரிந்து கொள்கின்றார்கள்.
வேகமாக முன்னுக்கு ஓடிவந்த இராணுவம் மல்லாவி, துணுக்காயில் நிறுத்தப்பட்டு, மோதலை எதிர்கொள்கிறது.
ஆகவே புலிகளின் நிழ்ச்சி நிரலின் படியே படையினரின் ஓட்டமும், நடைப்பயணமும் நிகழ்த்தப்படுகின்றன. அதனைப் புலிகளின் பலவீனமென்று பறைசாற்றி, அரசியல் லாபம் தேடுவதை எந்த முதலாளித்துவ அரசியல்வாதியும் நிராகரிக்க மாட்டார்.
இத்தகைய உளவியல் பரப்புரை தாயகத்தில் மட்டுமல்லாது புலம் பெயர்ந்த நாடுகளிலும் பெரிய தாக்கத்தை தமிழ் மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது.
விடுதலைக்கு எதிரான சக்திகள், தமக்கிடை யேயுள்ள சிறு வேறுபாடுகளையும் மறந்து ஒரே திசையில் பயணிக்கும் போது, எமது இணையத்தளமொன்றில் ஆய்வாளர்களை அரசியல் அறிவிலிகள் என்று குற்றம் சுமத்தி எமது சக்தியை மழுங்கடிக்கச் செய்யும் நகர்வொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விடுதலையை நோக்கிய நெருப்பாறு விரைவாக ஓடும். அந்த ஓட்டமானது தன்னால் நிகழ்வதாக வீசும் காற்று கற்பிதம் கொண்டால் நாமென்ன செய்ய முடியும்?
தேசியத் தலைமையின் ஆசீர்வாதத்தோடு வெளியிடப்பட்ட மொட்டைக் கட்டுரை போன்றே அது எழுதப்பட்டுள்ளதாக பல பத்தி எழுத்தாளர்கள் வருத்தம் கொள்கின்றார்கள்.
ஒன்று நிச்சயம். அதாவது, இன்று எமக்குள் பலப்பரீட்சை நடத்தும் நேரமல்ல இது என்பதை அனைத்து தரப்பினரும் உணர்ந்து நடந்துகொள்வதே தமிழினத்திற்கு நன்மை பயக்கும்.
Saturday, 2 August 2008
கள யதார்தங்களும் பிரச்சாரங்களும்--சி.இதயச்சந்திரன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment