Thursday, 7 August 2008

மகிந்த சிந்தனையில் வயிற்றிலுள்ள குழந்தைக்குக்கூட வாக்குறுதியளிப்பு

* இன்று மக்களுக்கு ஒருவேளை உணவு கூட இல்லை; கிரியெல்ல எம்.பி.

மஹிந்த சிந்தனையில் வயிற்றில் உள்ள குழந்தைக்குக் கூட வாக்குறுதியளித்தனர். ஆனால் இன்று ஒரு வேளை உணவுக்குக்கூட வழியில்லாத நிலையில் மக்கள் தவிக்கின்றனரென ஐ.தே.க.எம்.பி. லஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின்போது ஏற்பட்ட சர்ச்சையின்போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்;

சார்க் மாநாட்டில் ஒருவேளை உணவுக்காக 10 ஆயிரம் ரூபாவை செலவழித்துள்ளனர். ஆனால், மக்கள் வறுமையாலும், பட்டினியாலும் வதங்கிப் போயுள்ளனர். மஹிந்த சிந்தனையில் வயிற்றில் உள்ள குழந்தைக்குக் கூட வாக்குறுதியளித்த அரசு இன்று மக்களை பட்டினிச்சாவுக்குள் தள்ளியுள்ளது என்றார்.

இதனை கடுமையாக எதிர்த்த அமைச்சர் ஹேம குமாரநாணயக்கார, லக்ஷ்மன் கிரியெல்லவுக்கும் புலிகளுக்கும் கஷ்ட காலம். அதனால், தான் அரசு மீதும் ஜனாதிபதி மீதும் அபாண்டமாக பழிசுமத்துகிறார் என்று கூறினார்.

இதற்கு பதிலளித்த லக்ஷ்மன் கிரியெல்ல, ஜனாதிபதி மஹிந்தவை திருடன் என்று கூறியவர்தான் இந்த ஹேமகுமாரநாணயக்கார. ஆனால், இன்று அந்தத் திருடனுக்காக இவர் வக்காலத்து வாங்குகிறார். சார்க் மாநாடு தொடர்பில் நான் கூறியவை தவறென்றால் என்னை கைது செய்யுங்கள் என்றார்.

அப்போது எழுந்த அமைச்சரும் அரசதரப்பு பிரதம கொரடாவுமான தினேஷ் குணவர்த்தன, சார்க்மாநாடு நடக்காதென்றனர், சார்க் தலைவர்கள் வரமாட்டார்களென்றனர். ஆனால், இன்று எல்லாம் நல்லபடியாகவே நடந்து முடிந்துள்ளன. ஆனால், இப்போது தாம் அப்படி கூறவில்லையென மறுக்கின்றனர் என்றார்.

No comments: