Thursday, 7 August 2008

மார்ஷல்கள் சிலர் மாணவி மீது வல்லுறவு? கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

*மோதலில் மூவர் படுகாயம்

கொழும்பு பல்கலைக்கழக வளாகத்தினுள் அண்மையில் மாணவியொருவர் பல்கலைக்கழக மார்ஷல்கள் (ஒழுங்கை நிலைநாட்டும் அதிகாரி) சிலரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதாகக் கூறி நேற்று புதன்கிழமை மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட மோதலில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

கொழும்பில் "சார்க்' மாநாடு நடைபெற்ற காலப்பகுதியிலேயே பல்கலைக்கழகத்தினுள் இரு மார்ஷல்களால் இந்த மாணவி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பான தகவல்கள் கடந்த சில தினங்களாக மாணவர்கள் மத்தியில் பரவிய நிலையில், இது தொடர்பாக பல்கலைக்கழகத்தில் விசாரணைகளும் நடைபெற்றுள்ளது.

இந்த விசாரணை தொடர்பாக மாணவர்கள் மத்தியில் அதிருப்தியேற்பட்டிருந்ததுடன், இது தொடர்பான விசாரணை குறித்து மாணவர்கள் கருத்து வேறுபாடும் கொண்டிருந்தனர்.

பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக மாணவர்கள் விசாரணைக்குழுவிடம் கருத்து தெரிவிக்க முற்பட்ட போது அதனை விசாரணைக் குழு ஏற்றுக் கொள்ள மறுத்ததுடன், இந்தப் பாலியல் வல்லுறவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இரு மார்ஷல்களுக்கும் ஆதரவாகச் செயற்பட முனைந்ததாக மாணவர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

இந்த நிலையில், நேற்று புதன்கிழமை காலை பல்கலைக்கழக ஒழுக்காற்றுக் குழு அலுவலகம் முன்பாகத் திரண்ட பெருமளவு மாணவர்கள் இந்தச் சம்பவம் மற்றும் பக்கச்சார்பான விசாரணைக்கெதிராக ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.

இவ்வேளையில் அங்கு வந்த விரிவுரையாளர்களுக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்குமிடையே வாய்த்தர்க்க மேற்பட்டு அது கைகலப்பாக மாறி பின்னர் மோதலில் முடிவடைந்தது.

இதனால், விரிவுரையாளர் ஒருவரும் இரு மாணவர்களும் காயமடைந்து ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தையடுத்து அங்கு பொலிஸாரும் கலகமடக்கும் பொலிஸாரும் விரைந்ததுடன், பொலிஸார் பல்கலைக்கழகத்தினுள் சென்று நிலைமையைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இதேநேரம், ""காமுகர்களிடமிருந்து பல்கலைக்கழக மாணவிகளைக் காப்பாற்றுங்கள்' என்ற சுலோகங்களுடனான பதாகைகளும் பல்கலைக்கழக வெளிப்புறச் சுவர்களிலும் வேலிகளிலும் தொங்கவிடப்பட்டிருந்தன.

இந்த அசம்பாவிதங்களால் நேற்று பல்கலைக்கழகத்தில் பதற்றம் நிலவியது.

No comments: