Thursday, 14 August 2008

அதிகாரப்பகிர்வின் மூலமே தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படும்- ஐக்கிய தேசியக் கட்சி

பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்கு மோதல்களை முன்னெடுத்தாலும், அதிகாரங்களைப் பகிர்வதன் மூலமே தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

தமிழ் மக்கள் அரசாங்கத்தின் பக்கம் இல்லாமல் மோதல்களில் இலங்கைப் பாதுகாப்புத் தரப்பினரால் வெற்றிகொள்ள முடியாது என இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் நேற்றுமுன்தினம் கூறியிருந்தார். இந்தக் கருத்தையே ஐக்கிய தேசியக் கட்சி முன்பிருந்து கூறிவந்ததாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர இன்று வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாட்டையே தற்பொழுது இந்தியாவும் வெளிப்படுத்தியிருப்பதாகக் குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர், இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு தெளிவுபடுத்தப்பட வேண்டும் எனக் கூறினார்.

“பயங்கரவாதம் மோதல்கள் மூலமே தோற்கடிக்கப்படவேண்டும். அவ்வாறு பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டாலும், தமிழர்களின் பிரச்சினைகள் அதிகாரப்பகிர்வின் மூலமே தீர்க்கப்பட வேண்டும். இதுவே எமது உறுதியான நிலைப்பாடு” என்றார் தயாசிறி ஜெயசேகர.

யுத்தத்தின் மூலம் தீர்வுகாணமுடியாது என்பதை இந்தியா தெட்டத் தெளிவாக இலங்கை அரசாங்கத்துக்கு எடுத்துக் கூறியுள்ளது எனக் குறிப்பிட்ட அவர், இந்த விடயத்தின் தமது நிலைப்பாட்டை அரசாங்கம் வெளியிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

அதிகராப் பரவலாக்கல் தீர்வை வழங்குவதற்கு ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஜே.வி.பி. போன்ற கட்சிகள் தமது எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றன எனவும், இவற்றின் எதிர்ப்பினால் அரசாங்கம் இராணுவரீதியான தீர்வைநோக்கிச் சென்றிருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

அத்துடன், தமது கட்சி ஆட்சிக்குவந்தால் உடனடியாக 17வது திருத்தச்சட்டமூலத்தை அமுல்படுத்தி சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிப்பதற்கான அரசியலமைப்புச் சபை உருவாக்கப்படும் எனவும் ஜெயசேகர கூறினார்.

தற்போதைய அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் ஆதரவு குறைந்திருப்பதுடன், சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணசபைகளுக்கு வாக்குக் கேட்டுச் செல்லும் அமைச்சர்களை அங்குள்ள மக்கள் விரட்டியடித்திருப்பதாகவும், இதனால், கொழும்பிலிருந்து பல பேரூந்துகளில் மக்களை ஏற்றிச்சென்ற கள்ளவாக்குப்பதிவில் ஈடுபட அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர குற்றஞ்சாட்டினார்.

No comments: