Thursday, 7 August 2008

விடுதலைப் புலிகளுடனான மோதலில் இந்தியப்படையினர் ஈடுபடுகின்றனரா?

இந்தியாவின் 11 விமானப்படையினருடன் இலங்கைக்கு வந்துகொண்டிருந்த MI - 17 வகையைச் சேர்ந்த ஹெலிகொப்டர் ஒன்று தொழில்நுட்பக் காரணங்களால் நேற்று (6) மாலை மன்னார் அரிப்பு கடற்படையினரின் முகாம் பகுதியொன்றில் தரையிறக்கப்பட்டது. இந்த ஹெலிகொப்டர் இந்தியாவிலிருந்து இலங்கையை நோக்கி வந்து கொண்டிருந்ததாக விமானப்படை அதிகாரி ஒருவர் லக்பிம செய்தித்தாளுக்கு தெரிவித்துள்ளார்.

ஹெலிகொப்டரை செலுத்திய இரு விமானிகளும் உரிய நேரத்தில் தரை இறக்கியதால் விபத்திலிருந்து தப்பமுடிந்துள்ளதாக விமானப்படை வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

இந்த ஹெலிகொப்டர் நேற்று மாலை 2 மணியளவில் தரையிறக்கப்பட்டுள்ளதாகவும், ஹெலிகொப்டர் இலங்கை விமானப்படைக்கு சொந்தமானது எனவும் லக்பிமவுக்கு வின்கமாண்டர் ஜனக நாணயக்கார மூலம் தெரியவந்துள்ளது. இருந்தபோதிலும் அதிலிருந்தவர்கள் இந்திய பாதுகாப்புத்துறையைச் சேர்ந்தவர்கள் என தமக்கு தெரியவரவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்பக் காரணங்களுக்காக அந்த ஹெலிகொப்டர் நேற்று மாலை 5 மணிவரை அங்கு தரித்து நின்று விமானப்படையினரால் சரிசெய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த செய்திகள் இப்படி இருக்க மன்னார் அரிப்புப் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஹெலிகொப்டர் மீது நடத்திய தாக்குதலை அடுத்தே அது தரையிறக்கப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

ஒன்றுக்கு ஒன்று முரணான கருத்துகள் வெளிவந்த நிலையில் , விடுதலைப் புலிகளுடனான மோதலில் இந்தியப்படையினர் ஈடுபடுகின்றனரா அல்லது புலனாய்வு தகவல்களை வழங்குவதற்காக இலங்கை அரசுடன் இணைந்துள்ளனரா? எனும் கேள்வி தற்போது எழுந்துள்ளது. பத்திரிகை சுதந்திரம் பறிபோயுள்ள நிலையில் உண்மை தகவல்களை வெளியிட ஊடகவியலாளர்கள் அஞ்சுகின்றன.


No comments: