இலங்கையில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் அடிப்படைத் தகுதி பெறாதவர்கள் வெளிநாடுகளில் பெற்றுக்கொள்ளும் பட்டங்களை ஏற்றுக்கொள்ளப்போவதில்லையென இலங்கை உயர்கல்வி அமைச்சர், பேராசிரியர் விஸ்வ வர்ணபால தெரிவித்துள்ளார்.
அவ்வாறு வெளிநாடுகளின் பட்டங்களைப் பெற்றுவருபவர்களைத் தடுப்பதற்கு கல்வி முறையில் கடுமையான நடைமுறைகளைக் கடைப்பிடிக்கவிருப்பதாக அமைச்சர் கூறியுள்ளார்.
எனினும், அமைச்சரின் இந்தக் கருத்துத் தொடர்பாக மக்கள் மத்தியில் பல்வேறு விசனங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் பெற்ற பின்னர் உயர்த்தரத்தில் தகுதியைக் கோருவது தேவையற்ற விடயம் என பலர் கருத்து வெளியிட்டுள்ளனர். இலங்கையிலுள்ள பல்கலைக்கழகத்துக்கு அரசாங்கம் 18,000 மாணவர்கள் மாத்திரமே தேர்வுசெய்யப்படுகின்றபோதும், உயர்தரப் பரீட்சையில் 150,000 பேர் தோற்றுவதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் பொதுமக்கள், பல்கலைக்கழகம் சென்றவர்கள் வேலைகளைத் தேடிக்கொள்வதற்கு கஷ்டப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பட்டம்பெற்றும் வெளியேறும் மாணவர் ஒருவரின் சம்பளம் எவ்வளவு எனக் கேள்வியெழுப்பியிருக்கும் மக்கள், வெளிநாடுகளில் சாதாரணமான தொழிலாளி ஒருவர் பெற்றக்கொள்ளும் சம்பளத்தைவிட இலங்கையின் பட்டதாரி ஒருவரை குறைவான சம்பளத்தையே பெற்றுக்கொள்வதாகக் கூறியுள்ளனர்.
இலங்கையின் க.பொ.த. உயர்தரத்தில் சித்திபெறாது வெளிநாடுகளுக்குச் செல்லும் மாணவர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் அடிப்படைக் கல்விகளைக் கற்று அதன் மூலமே பட்டப்படிப்புக்களைத் தொடர்வதாக ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, இலங்கையில் உயர்தரத்தில் தகுதிபெறாது வெளிநாட்டில் பட்டம் பெற்றவர்களின் பட்டம் ஏற்றுக்கொள்ளப்படாது என உயர்கல்வி அமைச்சு அறிவித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment