பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் மற்றும் ஏனைய இருவரையும் இலங்கை அரசாங்கம் உடனடியாக விடுவிக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இவர்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கடந்த மார்ச் மாதம் கைதுசெய்யப்பட்டு இதுவரை எந்தவிதமான குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாத நிலையில் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.
கொழும்பு ஆங்கில ஊடகமொன்றின் பத்தியெழுத்தாளரும், அவுட்ரீச் இணையத்தளத்தின் ஆசிரியருமான திஸ்ஸநாயகம் மற்றும் இணையத்தளத்துடன் தொடர்புபட்ட ஈ.குவாலிட்டி அச்சகத்தின் உரிமையாளர் ஜசிகரன் மற்றும் அவருடைய மனைவி வளர்மதி ஆகியோர் விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்டவர்கள் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த மார்ச் 7ஆம் திகதி பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டபோதும் அவர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டி இருப்பதால் தடுத்துவைப்பதற்கு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றது. எனினும், இவர்கள் இதுவரை எந்தவிதமான குற்றச்சாட்டும் சுமத்தப்படாமல் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
“இவர்கள் மூவரும் 150 நாட்களுக்கும் மேலாக தடத்துவைக்கப்பட்டுள்ளனர். அர்கள் மீது இதுவரை எந்தக் குற்றப்பத்திரமும் தாக்கல் செய்யப்படவில்லை. அர்கள் குற்றஞ்செய்தார்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்கு உரிய ஆதாரங்கள் இல்லை. குற்றஞ்சுமத்துவதற்கு உரிய ஆதரங்கள் இல்லாவிட்டால் அவர்களை உடனடியாக விடுவிப்பதற்கு அதிகாரங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்” மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் கூறியுள்ளார்.
உள்ளூர் மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு அமைய தடுத்துவைக்கப்பட்டிருக்கும் மூவரின் மனித உரிமைகளும் தொடர்ந்தும் மீறப்படுவதால் இவர்களை உடனடியாக விடுவிப்பதற்கு சட்டமா அதிபர் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், குற்றப்பத்திரம் தாக்கல் செய்யாமல் தடுத்துவைத்திருக்கும் அதிகாரிகளுக்கு எதிராகவும் அவர் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பிரட் அடம் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment