Thursday, 14 August 2008

இந்தியாவின் மௌனமும் வன்னிப்பேரவலமும்--பிரசாந்தன்

ஈழத்தமிழகத்திலிருந்து தம் வாழ்வுக்காகப் போராடிக்கொண்டிருக்கும் உங்கள் உறவுகள் இடம்பெயர்ந்து இன்னலுற்றுக்கொண்டிருக்கும் இவ்வேளையில்,
கழியும் ஒவ்வொரு கணப்பொழுதும் எம்மக்களைச் சாவின் விளிம்புக்குத் தள்ளிக்கொண்டிருக்கிறது.

ஆக்கிரமிப்பை நோக்காகக்கொண்டு தன் படையினரை ஏவி எம்மக்களைக் கொன்று குவிக்கின்றான். இரவோடு இரவாக இடம்பெயரச் செய்கின்றான்.

இப்போது படும் அவலமிருக்கிறதே இதனை எக்காலமும் எந்த அடக்குமுறை அரசுகளும் தன் மக்கள் மீது நடத்தியதில்லை.


உலகம் இதற்கு முன்னறியாத வன்கொடுமைகளை எம் மக்கள் மீது பாயவிட்டு அவர்களைச் சொந்த ஊரிலிருந்தே அகதிகளாக வெளியேற்றுகிறது சிங்கள அரசு.

வன்னியில் இடம் பெற்றுவரும் மோதல்களில் இரண்டு தரப்புமே கடுமையான யுத்தத்தில் ஈடுபடுவதனால் பெருமளவான மக்கள் தமது வீடுவாசல்களைவிட்டு பாதுகாப்புத் தேடி இடத்திற்கு இடம் அலைந்து மரங்களின் கீழ் வெய்யிலிலும் மழையிலும் தமது நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர்.

கடந்த வருடத்தில் யுத்தம் மோசமாக ஆரம்பித்ததிலிருந்து எவ்வளவு பேர் தமது வீடு வாசல்களை விட்டு இடம் பெயர்ந்திருக்கிறார்கள் என்று யாருக்கும் சரியாகத் தெரியவில்லை.

ஆனால் ஒன்றரை இலட்சம் மக்கள் அரசாங்கத்தினதும் தொண்டு நிறுவனங்களினதும் உணவுக்காகவும் தங்குமிடத்தற்காகவும் தங்கியிருக்கிறார்கள் என்ற புள்ளிவிபரம் எவ்வளவு பேர் இடம் பெயர்ந்திருக்கிறார்கள் என்பதை ஓரளவுக்கு இனம் காட்டியிருக்கிறது.


அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இருப்பு, பற்றாக்குறையாக இருப்பதால் ஆயிரக் கணக்கான இடம் பெயர்ந்த மக்கள் அபாயத்தை எதிர்நோக்கியிருப்பதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் கடந்த வாரம் எச்சரித்திருந்தது.

விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையே இடம்பெற்று வரும் கடுமையான மோதல்களின் காரணமாக கடந்த ஜுலை மாதத்தில் மட்டும் அறுபதினாயிரம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் கணிப்பிட்டுள்ளது.


இரண்டு தரப்பினருக்கிடையேயான மோதலில் இருந்து தப்பி வருபவர்களுக்கு வழங்குவதற்கு தற்காலிக கூடாரம் உணவு தண்ணீர் போக்குவரத்திற்கான எரிபொருள் என்பன பற்றாக்குறையாக மிகக்குறைந்தளவிலேயே உள்ளதாகவும் அது சுட்டிக்காட்டியுள்ளது.


கடந்த சில மாதங்களில் இராணுவம் இராணுவ ரீதியாக குறிப்பிடத்தக்களவு வெற்றியைப் பெற்றுள்ளமை தெளிவாகிறது.


மன்னார் மாவட்;டம் பெருமளவில் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் தங்களது முக்கியமான கடற்படைத் தளத்தை இப்பிராந்தியத்தில் இழந்திருக்கிறார்கள்.


இராணுவ ரீதியாக பெரியளவு மாற்றங்கள் நடந்தாலொழிய இராணுவத்தினர் விடுதலைப் புலிகளின் முக்கிய பிரதேசங்களை குறிப்பாக கிளிநொச்சியை மிக விரைவில் சில சந்தர்ப்பங்களில் சற்றுப் பிந்தியேனும் கைப்பற்றிவிடும் என்று கூறப்படுகிறது.


இராணுவத்தின் யுத்த தந்திரோபாயம் மிகத் தெளிவானது. இராணுவ நடவடிக்கையின் போது குறித்த பிரதேசத்தை நோக்கி கடுமையான ஷெல் தாக்குதலை மேற்கொள்வது, இதனூடாக மக்களை அப்பிரதேசத்திலிருந்து வெளியேற்றி விட்டு அப்பகுதியை நோக்கி நகர்வது.


ஊரைவிட்டு வெளியேற்றப்பட்ட மக்கள் போக்கிடமேதுமற்று மரநிழலிலும் மதவுகளுக்குக் கீழும் வீதியோரங்களிலும் படும் அவலமிருக்கிறதே அதையெப்படி உங்களுக்குப் புரியவைக்கமுடியும்.

இப்போது இங்கே கொடூர வெய்யிலெறிக்கிறது. அதனாற் கானலடிக்கிறது. அடுத்தமாதம் மழைபொழியப் போகிறது.


இன்னும் சில மாதங்களில் பனி பெய்யப்போகிறது. ஆனால் இடம்பெயர்ந்த எம்மக்கள் கோடைக்கோ அல்லது மாரிக்கோ தாக்குப்பிடிக்கக் கூடியதாக எந்தத் தரிப்பிடமுமற்றுத் தவிக்கின்றனர்.


சமைக்க அரிசியில்லை, சரிந்து படுக்கப் பாயில்லை, குளிக்கக் கிணறில்லை, குடியிருக்கக் கொட்டிலில்லை.. ஷஇல்லையே| நிறைந்திருக்கும் வாழ்வில் எம்மக்கள் இடருற்றுக்கிடக்கின்றனர்.


எங்கள் அவலமும் எம்மக்களின் அழுகையும் வெளியே தெரிந்துவிடுமென்றஞ்சி எதிரி எம்மை இராணுவ வேலிபோட்டு மூடியுள்ளான். எமது குரல்கள் உலகுக்குக் கேட்டுவிடுமோ என்றஞ்சிக் காற்றுக்குக்கூட அவன் கட்டளையிட்டுள்ளான்.

விடுதலைப் புலிகளின் எதிர்ப்பைச் சிதறடிப்பதற்காக இராணுவம் பல்வேறு பகுதிகளில் யுத்த முனைகளைத் திறந்து விட்டிருக்கிறது. இராணுவத்தினரின் ஆட்பலமும் வான் தாக்குதல் பலமும் அவர்களுக்கு வாய்ப்பான ஒரு சூழலைத் தோற்றுவித்திருக்கிறது.


மக்களுக்குள்ள இன்னொரு வழி புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து வெளியேறுவதாகும். ஆனால் அது மிகக் கடினமானதாகும். ஏனெனில் பிரதான வீதிகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கின்றன.


உள்வீதிகள் பாதுகாப்பற்றதும் கண்ணிவெடிகள் மற்றும் குண்டுகள் காணப்படுவதுமாகும். இதைத் தவிர மக்கள் வெளியேற முயற்சித்தாலும் விடுதலைப் புலிகள் அனுமதிப்பார்களா என்பது சந்தேகமே? மிகக் குறைந்தளவிலான உடமைகளுடன் குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு பெண்களும் ஆண்களும் பாதுகாப்புத் தேடி இடத்திற்கு இடம் அலைந்து கொண்டிருக்கின்றனர்.


பாதுகாப்பான ஓரிடமோ அங்கீகரிக்கப்பட்ட அகதிமுகாம்களோ அங்கெங்கும் இல்லை. வசதியான குளிக்கும் இடங்களோ கழிவறைகளோ அங்கில்லை. மக்கள் வெட்டவெளிகளில் வெக்கைக்கும் நுளம்புகளுக்குமிடையில் தூங்க வேண்டியிருக்கிறது.


உதவி நிறுவனங்களால் போதியளவு உதவியைச் செய்வதற்கு முடியாமலிருக்கிறது. குறிப்பாக இப்பிரதேசங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் எடுத்துச் செல்வதற்கும் போக்குவரத்திற்கும் விதிக்கப்பட்ட தடை மிகப் பெரிய சிக்கலாக இருக்கிறது என உதவி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.


ஆனால் அரசாங்கம் தாங்கள் போதியளவிலான அத்தியாவசியப் பொருட்களை விடுதலைப் புலிகளின் பகுதிகளுக்கு அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. அங்கு எந்தத் தடைகளுமில்லை,


எந்தப் பற்றாக்குறையும் இல்லை, அப்பிரதேசங்களிலுள்ள அரசாங்க அதிகாரிகள் கேட்டுக் கொண்டபடி நாங்கள் உணவுப் பொருட்களையும் தேவையான அத்தியாவசியப் பொருட்களையும் அனுப்பி வைத்துக் கொண்டிருக்கிறோம் என்கிறார் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார. யாருக்கும் தெரியாது யுத்தம் எப்போது முடியும் என்று.


பல்லாயிரக்கணக்கான மக்கள் பசித்த வயிற்றுக்குக் கூழ்கூடயின்றிக் குறண்டிப்போயுள்ளனர்.

அடர்காட்டுக்குள் தங்கள் இரவுகளைக் கழிக்கின்றனர். மருத்துவ வசதியின்றியே இங்கே மரணங்கள் மலிந்துவிட்டன. உங்கள் பிள்ளைகளையொத்த சிறுவர்கள் இங்கே கையேந்தி நிற்கின்றனர்.


உங்கள் தாயாரையொத்த தாயர் இங்கே தாங்குகொடியின்றித் தள்ளாடுகின்றனர். எவராவது வந்து எம்மை எடுக்கமாட்டார்களா என்று ஒவ்வொரு பொழுதுடனும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கின்றனர். இவர்களின் எதிர்பார்ப்புக்களை நீங்களே ஏற்றுக் கொள்ளுங்கள்.

தானாடாவிட்டாலும் தன் தசையாடும் என்பார்கள். எம் தேசமும் எம்மக்களும் இன்றுபடும் இந்த இன்னலிலிருந்து எங்களை நீங்களே கரையேற்ற வேண்டும்.

சர்வதேசத்தின் மௌனம் குறிப்பாக இந்தியாவின் மௌனம் துன்பப்படும் மக்களுக்கு அபத்தமாயிருக்கிறது. போரின் தீவிரம் குறைவதாயில்லை.

உதவிநிறுவனங்களும் துன்பப்படும் மக்களும் மனித அவலம் தொடர்ந்து அங்கு அதிகரிக்கும் என்றே அஞ்சுகிறார்கள்.

உதவி: தமிழர் சமூகப் பொருளாதார அபிவிருத்தி நிறுவனம் (SEDOT) அறிக்கை, தமிழ் செய்திகள்,பிளிக்கர்.காம்

No comments: