தமிழ் மக்களை அழித்தொழிப்பதற்காகவே தமிழர் மீது யுத்தத்தை அரசு முன்னெடுத்துச் செல்கின்றது.
யுத்தத்திற்காக பெருமளவு நிதியையொதுக்கி இனவாத, மதவாத அரசியலைப் பயன்படுத்தி நாட்டை படுகுழிக்குள் தள்ளும் செயற்பாட்டையே அரசு செய்து வருகிறது.
ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சினையை மையமாக வைத்து சிங்கள ஆளும் தரப்புகள் சிங்கள பேரினவாதிகளையும் கடும் போக்காளர்களையும் திருப்திப்படுத்த முனைகின்றன. - அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“யுத்தத்தையும் உலகசந்தையின் போக்கையும் காரணம் காட்டி ஏழை மக்களை அரசு ஏமாற்றி வருகின்றது. முதலாளித்துவ வர்க்கத்தினர் இலாபங்களை பெற்று வரும் நிலையில் ஏழை மக்கள் தமது வயிற்றை இறுக்கிக் கட்டியவாறு பசி பட்டினியுடன் அரைகுறை வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.
அரசின் செயற்பாடுகளில் இந்நாடு சமூக, பொருளாதார, அரசியல் ரீதியில் சிதைந்து சீர்கெட்டுப் போன நாடாக மாறி வருகிறது. இந்நாட்டில் எதிர்வரும் காலங்களில் எமது மக்கள் பொருளாதார சுமைகளாலும் யுத்தத்தின் கொடூரங்களாலும் கடுமையான வேதனைகளை அனுபவிக்கப் போகின்றனர் என்பது திண்ணம்.
இந்த அரசு இராணுவ நிகழ்ச்சி நிரலை பிரதான அங்கமாக வழிப்படுத்தியுள்ளது.
கடந்த இரு வருட காலத்தில் முன்னெப்போதும் இல்லாதளவிற்கு வாழ்க்கைச் செலவானது எவ்விதக் கட்டுப்பாடுமின்றி அதிகரித்துச் செல்கிறது. வடக்குää கிழக்கில் லட்சணக்கான குடும்பங்கள் போஸாக்கின்மையால் வாடிவதங்குகின்றன.
எனவே நாட்டை மீளக் கட்டியெழுப்ப அரசியல்வாதிகளும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும் முன்வர வேண்டும். சிங்கள கடும் போக்காளர்களின் பிற்போக்குத்தனமான நிகழ்ச்சி நிரலை நிராகரித்து தமிழ் பேசும் மக்களுக்கு போதிய அதிகாரத்தை பகிர்ந்தளித்து அபிவிருத்தியி;ல் பங்குதாரர்களாக்குவதே சுபீட்சத்துக்கான ஒரே வழி என்பதை சகல அரசியல்வாதிகளும் புரிந்து கொள்ள வேண்டும்.
வடக்கு, கிழக்கில் விவசாய வர்த்தக நடவடிக்ககைளில் ஈடுபட்டு வந்த பலர் தமது தொழில்களை கைவிட்டு வீடுகளில் முடக்கப்பட்டுள்ளனர். இதனால் விவசாயத்தில் ஈடுபட வசதிகளோ இல்லாதிருக்கிறது. போதுமான வருமானம் இன்மையாலும் அதிகரித்துச் செல்லும் செலவினங்கள் காரணமாகவும் இவர்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேலை வாய்ப்பின்றியும் வருமானம் ஈட்டும் மார்க்கங்களின்றியும் மக்கள் பெரும் கஸ்டங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
கிழக்கில் மாகாணசபை தேர்தலுக்கு பின்னர் சோதனைச் சாவடிகள் சாணுக்கொன்று முழத்திற்கொன்றாக அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக மட்டக்களப்பு நகரில் இருந்து அக்கரைப்பற்று வரை செல்லும் நெருஞ்சாலையில் 15 இற்கும் மேற்பட்ட சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வீதி சோதனைச் சாவடிகளால் கிழக்கு மக்கள் படும் வேதனைகள் கொஞ்ச நஞ்சமில்லை.
சில சோதனைச்சாவடிகளில் தமிழர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தனியாகப் பதிவு செய்யப்படுகிறார்கள். சில பஸ்கள் வழிமறிக்கப்பட்டு, படையினரால் சோதனையிடப்படும்பொழுது தமிழர்கள் இருக்கின்றனரா? எனக் கேள்வி எழுப்பப்படுகிறது. அவை அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் மாத்திமல்லாமல் தமிழர்களை அவமானப்படுத்தும் செயலுமாகும்.
கிழக்கில் மாகாணசபை ஏற்படுத்தப்பட்டதாக கூறப்பட்டதன் பின்பும் ஏன் இவ்வாறானதொரு அவலம் தொடர்கிறது என்பதற்கு கிழக்கின் ஆட்சியாளர்கள்தான் பதில் கூற வேண்டும். கிழக்கில் அம்பாறை, மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களில் மாலை 7 மணிக்குப் பின்னர் சில பிரதேசங்களில் மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை தொடர்கிறது.
இரவு நேரங்களில் நோய்நொடிகள் ஏற்பட்டாலும் அச்சம் காரணமாக காலையில்தான் வெளியில் செல்லும் பரிதாபகரமான நிலை ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் மக்களின் நடமாட்டங்கள் தடுக்கப்பட்டுள்ளதுடன் கொள்ளைகள்ää களவுகள் அதிகரித்துமுள்ளன.
நாள்தோறும் இராணுவத்தினரால் சுற்றி வளைப்புகள் நடைபெறுகின்றன. பாலியல் வல்லுறவுகள் கடத்தல்கள் காணாமல் போதல் சம்பவங்கள் கப்பம் கோரல்; போன்ற பல்வேறு சம்பவங்கள் சில ஆயுதக்குழுக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நாளைய பொழுது எப்படி விடியுமோ என தெரியாத நிலையில் மக்கள் திண்டாடுகின்றனர். அவைதான் அரசு பறைசாற்றும் கிழக்கு மீட்ட பின்னரான ஜனநாயகமா எனத் தங்களைக் கேட்க விரும்புகிறேன்.
வடக்கு கிழக்கில் ஜனநாயகம் செத்துப் போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த விடயங்களை வெளிக்கொண்டு வரும் ஊடகவியலாளர்களை இனந்தெரியாத ஆயுதக்குழுவினர் தொடர்ந்தும் அச்சுறுத்தி வருகின்றனர். இதனால் ஊடகச் சுதந்திரம் முற்றாக பாதிக்கப்பட்ட நிலை காணப்படுகிறது.
எனவே நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக மட்டங்களில் தோன்றியுள்ள பிரச்சினைகளுக்கு நியாயமானதும் காத்திரமானதுமான தீர்வுகளை விரைவாக ஏற்படுத்தி, சிங்கள அரசின் மீது தமிழ் மக்கள் கொண்டுள்ள வெறுப்பையும் ஆத்திரத்தையும் இல்லாமல் செய்வதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
No comments:
Post a Comment