Sunday, 10 August 2008

தமிழ் மக்கள் மீதான அடக்குமுறையே இனப்பிரச்சினைக்கான மூலகாரணி-அமைச்சர் ராஜித சேனாரத்ன

சிங்கள தீவிரவாதப் போக்குடையவர்களின் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைப் போக்கும், பரிவு மனப்பான்மை, புரிந்துணர்வு, பகிர்ந்தளிக்கும் ஆற்றல் என்பவற்றிலுள்ள குறைபாடுகளுமே இன்று நாட்டின் இனப்பிரச்சினை இவ்வளவு தூரம் வளர்ச்சியடைவதற்கு முக்கிய காரணம் என பொறியியல் மற்றும் கட்டுமான அமைச்சர் டாக்டர்.ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில வாரப் பத்திரிகையொன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாகவே நாடு இன்று பயங்கரவாதத்துக்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், பயங்கரவாதம் என்பது பிரச்சினைக்கான அறிகுறி மாத்திரமே என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரச்சினைக்கான உண்மையான காரணியைக் கண்டறிந்து அதற்கே தீர்வினைக் காண முற்படவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், தமிழ் மக்கள் மீதான அடக்குமுறையே இனப்பிரச்சினைக்கான உண்மையான காரணி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இந்தக் காரணியைக் கண்டறிவதில் 1956 முதல் வந்த தெற்கின் தலைமைகள் மீண்டும் மீண்டும் தோல்வியையே சந்தித்து வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

13வது திருத்தச் சட்டமூலத்தையும் விட மேலதிகமாக வழங்குவது இனப்பிரச்சினைக்கான பிரதான தீர்வாக அமைய முடியுமா எனும் கேள்விக்கு இல்லை எனப் பதிலளித்துள்ள அவர், 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதை தீர்வுக்கான முதற்கட்ட முன்னெடுப்பாகக் கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

இதனைச் செய்வதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் எனவும், இதுவே பயன்தரக் கூடிய நடவடிக்கை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாட்டைப் பிரிக்காது எவ்வாறு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க முடியும் என மக்களை அறிவூட்ட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள அமைச்சர் ராஜித சேனாரத்ன, அதன்பின்னர் அதிகாரப் பரவலாக்கலை நோக்கி முன்னேற முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதிகாரப் பரவலாக்கல் குறித்து பெரும்பான்மையான மக்கள் எந்தளவு தூரம் அறிநிதுவைத்திருக்கிறார்கள் எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு, சமஷ்டி எனும் சொல்லினை பெரும்பான்மையான சிங்கள மக்கள் தவறாகவே விளங்கிக் கொண்டுள்ளதாக அமைச்சர் பதிலளித்துள்ளார்.

சமஷ்டி எனும் எண்ணக்கருவினை தமிழ் அரசியல் தலைமைகளே முதலில் முன்மொழிந்ததன் காரணமாக, அன்றிலிருந்து சமஷ்டியை பிரிவினைவாதத்துக்குச் சமனான ஒன்றாகவே சிங்களவர்கள் கருதுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சமஷ்டி எண்ணக்கருவை முன்வைத்தவர்கள் பின்னர் தனிநாடு அல்லது தமீழீழக் கோரிக்கையை முன்வைத்ததாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்காரணமாக, சமஷ்டி எண்ணக்கரு ஏற்றுக்கொள்ளப்பட்டால், சிலவேளை தமிழ் அரசியல் கட்சிகள் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைக்கக்கூடும் எனும் அச்சம் எழுந்ததாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சமஷ்டி என்பது பல ஐரோப்பிய நாடுகளிலும், அயல்நாடான இந்தியாவிலும் ஒரு மோசமான வார்த்தையாக கருதப்படவில்லை எனத் தெரிவித்துள்ள அவர், இலங்கையின் தெற்கில் இது தொடர்பாகவுள்ள தவறான புரிந்துணர்வை முதலில் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

13வது திருத்தச்சட்டமூலத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு தாம் கோருவதானது, அரசியலமைப்பின் ஒருபகுதியே எனவும், அக்கோரிக்கை சட்டரீதியாதும் கூட எனக்குறிப்பிட்டுள்ள அமைச்சர், அதனை எதிர்ப்பவர்கள் அரசியலமைப்பு குறித்த சரியான அறிவற்றவர்களே எனவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி, அமைச்சர்கள், நீதிபதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க ஊழியர்கள் அனைவரும் அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டே பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments: