Sunday, 10 August 2008

அரசாங்கம் எழுத்து மூல பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்க வேண்டும்-மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்

மடுமாதா ஆலய வருடாந்த உற்சவத்தை நடாத்துவதற்கு முன்னர் அரசாங்கத்திடமிருந்து பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் எனவும், விடுதலைப் புலிகளின் ஒத்துழைப்பை தன்னால் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் அடிகளார் தெரிவித்துள்ளார்.

சண்டே ஒப்சேவர் பத்திரிகைக்கு வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகள் வாய் மூலமாக உறுதிமொழி வழங்கினாலும், அரசாங்கத்திடமிருந்து தாம் எழுத்துமூல உறுதிமொழியை எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் மடுமாதா ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்ட 5 அமைச்சர்களும் தனது நிலைப்பாட்டினை விளங்கிக்கொண்டுள்ளதாகவும், அரசாங்கத்திடமிருந்து எழுத்துமூல உறுதிமொழியினை பெற்றுத்தருவதாக அவர்கள் தன்னிடம் கூறியதாகவும் மன்னார் மறைமாவட்ட ஆயர் தெரிவித்துள்ளார்.

உணவுப் பிரச்சினை, பாதுகாப்பு உத்தரவாதமின்மை, கண்ணிவெடி அபாயம் ஆகியவையே இம்முறை மடுமாதா வருடாந்த உற்சவத்தை வழமைபோன்று பாரியளவில் நடாத்த முடியாமைக்கு காரணம் என்றும் இராயப்பு ஜோசப் அடிகளார் தெரிவித்துள்ளார்.

மடுமாதா ஆலய வளாகப் பகுதியில் இடம்பெற்ற மோதல்களின் காரணமாக அங்குள்ள கிணறுகள் அசுத்தமடைந்துள்ளதாகவும், வழிபாட்டில் ஈடுபட வரும் மக்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் ஏற்பாடு செய்யாமல் மக்களை அங்கு வரவழைக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பாதுகாப்புப் பிரச்சினையையும் தாம் எதிர்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ள அவர், ஆலய வளாகத்தை சமாதான வலயமாகப் பிரகடனப்படுத்துமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள்விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கத்தோலிக்க ஆலயத்தின் நிருவாகத்தில் யாரும் தலையிடுவதை அனுமதிக்கமுடியாது எனவும், ஆலயத்தின் நிருவாகிகள் மத நம்பிக்கை, ஆன்மீகம், மற்றும் அவர்களுக்குரிய விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எனவும் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் அடிகளார் சுட்டிக்காட்டியுள்ளார்.

விடுதலைப் புலிகள் வாய்மூலமாக தன்னிடம் வாக்குறுதியளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ஆயர், அரசாங்கம் ஆலய வளாகத்தை சமாதான வலயமாகப் பிரகடனப்படுத்தினால், தாமும் அதன்படி நடக்கத் தயாராகவிருப்பதாக புலிகள் தன்னிடம் குறிப்பிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மறைந்த தமிழ்ச்செல்வன் தன்னிடம் மாத்திரமன்றி ஏனைய குருமுதல்வர்கள் முன்னிலையிலும் இந்த வாக்குறுதியை வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ள அவர், புலிகளின் தற்போதைய அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன், பி.பி.சி செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியிலும் சமாதான வலயமாகப் பிரகடப்படுத்த புலிகள் தயார் எனக் குறிப்பிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மூன்று மில்லியன் ரூபா செலவில் படையினர் மடு ஆலயத்தை புனரமைப்புச் செய்தமை குறித்து தனது நன்றிகளைத் தெரிவித்துள்ள அவர், இதனால் தான் பெரிதும் மகிழ்ச்சியடைவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments: