15வது சார்க் மாநாடு கொழும்பில் நடைபெற்றுவரும் நிலையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்ட முக்கியஸ்தர்கள் சிலர் குழப்பங்களுக்கு உள்ளாக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 
15வது சார்க் மாநாட்டின் முதலாவது நாள் நிகழ்வில் கலந்துகொண்ட இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராணயனன் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்திலிருந்து எந்தவிதமான பாதுகாப்பும் இன்றி, உல்லாசவிடுதிக்குச் சொந்தமான வாகனத்தில், அவர் தங்கியிருந்த தாஜ் சமுத்திரா உல்லாச விடுதிக்குத் திரும்பியதாகத் தெரியவருகிறது.
சார்க் மாநாட்டின் முதலாவது நாள் அமர்வுகள் முடிவடைந்த நிலையில் இந்தியப் பிரதிநிதிகள் அனைவரும் பாதுகாப்புப் பிரிவினரின் பாதுகாப்புடன் அழைத்துச்செல்லப்பட்டனர்.
எனினும், தனக்கான வாகனத்துக்காகக் காத்திருந்த இந்தியத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராணயன், இறுதியாக தான் தங்கியிருந்த உல்லாசவிடுதியிலிருந்து வாகனத்தை வரவழைத்து, எந்தவிதமான பாதுகாப்பும் இன்றி அந்த வாகனத்திலேயே விடுதி திரும்பியதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சார்க் பிரதிநிதிகளின் பிரயாணத்துக்காக வீதிகள் மூடப்பட்டிருந்த நிலையில், அவர் பாதுகாப்பு எதுவுமின்றிச் சென்றபோதும், தாஜ் சமுத்திரா உல்லாசவிடுதியின் வாகனத்தில் சென்றமையால் எம்.கே.நாராயணன் வழியில் மறிக்கப்படாது விடுதியைச் சென்றடைந்ததாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி, பிரதிப் பொலிஸ்மா அதிபர் எஸ்.எம்.விக்ரமசிங்க, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனைச் சந்தித்து இடம்பெற்ற சம்பவத்துக்கு மன்னிப்புக் கோரியுள்ளார்.
சர்வதேச மாநாட்டு மண்டபத்திலிருந்து பயணிக்கும் அனைத்து வாகனங்களுக்குமான பாதுகாப்பை ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவே மேற்கொண்டிருந்தது. எனினும், சில அதிகாரிகள் உரியமுறையில் தமது கடமைகளை மேற்கொள்ளவில்லையென வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் அந்த ஊடகத்திடம் கூறியிருந்தார்.
இதேபோன்றதொரு சம்பவம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் பாதுகாப்பிலும் ஏற்பட்டிருப்பதாக அந்த ஊடகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துவிட்டு உல்லாசவிடுதிக்குத் திரும்பும் போது அவருடைய வாகனத்தில் செல்லவேண்டிய இலங்கைப் பாதுகாப்பு அதிகாரி சமூகமளிக்கவில்லையெனவும்,
இதனை அறிந்துகொண்ட இந்தியப் பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக மன்மோகன் சிங்கின் வாகனத்தில் ஏறி அவருக்குப் பாதுகாப்பு வழங்கிச் சென்றதாக அந்த ஊடகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சென்றடைந்த பின்னரே உரிய இலங்கை பாதுகாப்பு அதிகாரி அங்கு சென்றதாகவும், இந்த விடயம் குறித்து விசாரணைகளை நடத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை வழங்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆசன ஒதுக்கீட்டில் குழப்பம்
நேற்று சனிக்கிழமை நடைபெற்ற 15வது சார்க் உச்சிமாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கு பின்வரிசைகளிலேயே ஆசனங்கள் ஒதுக்கப்பட்டதாகத் தெரியவருகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு 4வது வரிசையிலும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கு 5வது வரிசையிலும் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இவர்கள் பின்னால் அமர்த்தப்பட்டிருப்பதை அறிந்துகொண்டு முன்னால் அமர்ந்திருந்த அமைச்சர்கள் அவர்களை முன்னால் அமர்வதற்கு வழிவிட்டதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேநேரம், இலங்கையின் முதற்பெண்மணியான சிராந்தி ராஜபக்ஷவும் ஆசனத்துக்காக காத்திருக்கவேண்டி ஏற்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதேவேளை, முக்கியஸ்தர்களின் வாகனங்களுக்கான தரிப்பிடத்திலும் ஒழுங்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லையென ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

No comments:
Post a Comment