Saturday, 2 August 2008

இலங்கை சார்க் தலைவர்களுக்கு அல்வா கொடுத்துள்ளது!

புலிகள் அல்கொய்தா தொடர்பாம், இலங்கை ராணுவம் சார்க் தலைவர்களுக்கு அல்வா !

இலங்கையில் தனி ஈழம் கோரி போராடி வரும் விடுதலைப்புலி களுக்கு அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக இலங்கை ராணுவம் திடுக்கிடும் புகார் தெரிவித்துள்ளது. விடுதலைப்புலிகளை எதிர்த்து போராட தெற்காசிய நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அது கேட்டுக் கொண்டுள்ளது.

இலங்கை தலைநகர் கொழும்பில் இன்று தொடங்கி 2 நாட்களுக்கு தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பான சார்க் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி இலங்கையில் குவிந்துள்ள சர்வதேச பத்திரிகையாளர்களுக்கு இலங்கை ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் கெகலியா ரம்புக்வாலா பேட்டி அளித்துள்ளார்.

விடுதலைப்புலிகளுக்கும் தெற்காசியாவில் செயல்பட்டு வரும் அல்கொய்தா உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

விடுதலைப்புலிகளுக்கு எதிராக இலங்கை ராணுவம் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளின் போது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நபர்களை தாங்கள் சந்தித்ததாக கூறிய அவர் விடுதலைப்புலிகளுக்கும் இதர பயங்கரவாத அமைப்புகளுக்கும் தொடர்பு இருப்பதை அது உறுதி செய்வதாகவும் ரம்புக்வாலா தெரிவித்தார்.

தெற்காசிய கூட்டமைப்பில் பங்களாதேஷ் பூட்டான் இந்தியா நேபாள் பாகிஸ்தான் இலங்கை மாலத்தீவு மற்றும் ஆப்கனிஸ்தான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் இந்தியா இலங்கை பாகிஸ்தான் மற்றும் ஆப்கனிஸ்தான் நாடுகள் சர்வதேச மற்றும் பிராந்திய பயங்கரவாத அமைப்புகளின் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றன.

இந்த நிலையில் சர்வதேச பயங்கரவாத அமைப்பான அல்கொய்தாவுடன் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு இருப்பதாக இலங்கை ராணுவம் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments: