ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி.திஸ்ஸாநாயக்கவின் குடியுரிமையை மீண்டும் வழங்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை தெரிவித்துள்ளது.
எஸ்.பி. திஸ்ஸாநாயக்கவின் குடியுரிமையைப் பறித்தமையானது மனித உரிமையை மீறும் செயல் எனவும், அவரின் குடியுரிமையை மீண்டும் வழங்குவதுடன், அவருக்கு நட்டஈடு வழங்குமாறும் ஐக்கிய நாடுகள் சபை பரிந்துரை செய்துள்ளது.
ஹபராதுவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய எஸ்.பி.திஸ்ஸாநாயக்க நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்ததாகக் கூறி, 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7ஆம் திகதி அவருக்கு, உயர்நீதிமன்றம் இரண்டு வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனை வழக்கித் தீர்ப்பளித்தது.
இந்த நிலையில், தன்னைப் பாராளுமன்றத்துக்குச் செல்ல அனுமதிக்க வேண்டுமெனக் கோரி சிறையிலிருந்த காலத்தில் எஸ்.பி.திஸ்ஸாநாயக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தபோதும் அதனை நீதிமன்றம் நிராகரித்திருந்தது.
இதனையடுத்து அவருக்குப் பொதுமன்னிப்பு வழங்கவேண்டுமென அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டதுடன், எஸ்.பி.திஸ்ஸாநாயக்கவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியையும், பொதுக்கூட்டமொன்றையும் நடத்தியிருந்தது.
இந்த நிலையில் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேலாக பாராளுமன்றத்துக்குப் பாராளுமன்றத்துக்குச் செல்லாததால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும், குடியுரிமைiயும் எஸ்.பி.திஸ்ஸாநாயக்க இழந்தார். இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவுக்கமைய எஸ்.பி.திஸ்ஸாநாயக்க விடுவிக்கப்பட்டார்.
இவரை இந்த மாதம் நடைபெறவிருக்கும் வடமத்தியமாகாணசபைத் தேர்தலில் போட்டியிட வைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. இந்த நிலையிலேயே எஸ்.பி.திஸ்ஸாநாயக்கவின் குடியுரிமைகளை வழங்கவேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை பரிந்துரை செய்துள்ளது.
எனினும், எஸ்.பி.திஸ்ஸாநாயக்கவின் குடியுரிமையை வழங்குவது பற்றி உயர்நீதிமன்றமே தீர்மானிக்கவேண்டும் என ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கூறினார்.

No comments:
Post a Comment