மட்டக்களப்பில் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் கடத்தப்பட்ட தமிழ் இளம்பெண் ஒருவர் கொழும்பில் தப்பிச்சென்ற வேளை சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றார்.
இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது:
மட்டக்களப்பு பொது நூலகத்துக்கு சென்று கொண்டிருந்தவேளை கடந்த செவ்வாய்க்கிழமை மாலை குறிப்பிட்ட இளம்பெண் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் கடத்தப்பட்டுள்ளார்.
அங்கிருந்து கல்லடிக்கு கொண்டு செல்லப்பட்டு அதன்பின் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளார்.
கடத்தப்பட்டப்பட்ட வேறு சில இளம்பெண்களுடன் கொழும்பு கறுவாத்துதோட்டம் பகுதியில் வந்துகொண்டிருந்த சமயம் - நேற்று புதன்கிழமை மாலை - அந்த வாகனத்திலிருந்து தப்பிய இந்த இளம்பெண், முச்சக்கர வாகனம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி கொழும்பில் உள்ள தனது உறவினர் வீடொன்றுக்கு சென்றுகொண்டிருக்கையில், வழியில் வீதிச்சோதனைக்காக முச்சக்கர வாகனத்தை மறித்த சிறிலங்கா காவல்துறையினர் இவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இந்த இளம்பெண் வெள்ளவத்தை காவல்துறை அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் றஞ்சித் குணசேகர தெரிவிக்கையில் -
மட்டக்களப்பில் தான் கடத்தப்பட்ட வாகனத்தில் மேலும் நான்கு இளம்பெண்கள் ஏற்கனவே கடத்தி ஏற்றப்பட்டிருந்தனர் என்று குறிப்பிட்ட இளம்பெண் தெரிவித்தார் என்றும் -
தமது வழமையான வீதிச்சோதனையின் போது முச்சக்கர வாகனத்தை மறித்து சோதனை செய்து குறிப்பிட்ட பெண்ணை விசாரித்தபோது இந்த விடயங்கள் தெரியவந்தன என்றும் -
தமது விசாரணைகளை முடித்துக்கொண்டு இவரை குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் தாம் கையளிக்கவுள்ளதாகவும் - கூறினார்.

No comments:
Post a Comment