Tuesday, 5 August 2008

பிரித்தானியாவில் கடனட்டை மோசடி, விடுதலைப் புலிகளுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் சதி

பிரித்தானியாவில் கடனட்டை மோசடிகளில் ஈடுபடும் தனி நபர்கள், அல்லது குழுக்கள், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டவுடன், தண்டனையில் இருந்து தப்புவதற்காக, விடுதலைப் புலிகளின் தூண்டுதலில் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி வருகின்றனர்.

இவ்வாறான நபர்கள் தாமாக தவறு செய்கின்றனரா அல்லது, சிறீலங்கா போன்ற நாடுகளின் புலனாய்வுப் பிரிவினரின் தூண்டுதலில் செயற்படுகின்றனரா என்ற சந்தேகம் பிரித்தானிய காவல்துறையினர் மத்தியில் வலுப்பெற ஆரம்பித்துள்ளது.

லீசெஸ்ரர்சையர் (Leicestershire) பகுதியில் பெற்றோல் நிரப்பு நிலையம் ஒன்றில் பணியாற்றிய 33 அகவையுடைய அப்துல் சமத் மொஹமட் றயிக் (Abdul Samad Mohamed Raik) என்ற முஸ்லீம் நபர், கடனட்டை மோசடியில் ஈடுபட்டதாக, பிரித்தானிய நீதிமன்றில் முன்னிறுத்தப்பட்டுள்ளார்.

இவர் தானாக சென்று காவல்துறையினரிடம் சரணடைந்திருப்பதுடன், விடுதலைப் புலிகளின் தூண்டுதலில் செயற்பட்டதாகவும், அவர்களே கடனட்டை மோசடிக்கான உபகரணங்களை தனக்கு வழங்கியதாகவும் விசாரணையில் கூறியிருக்கின்றார்.

பிரித்தானியாவில் குற்ற செயல்களில் ஈடுபட்டு தமிழ் சமூகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காக கொழும்பில் இருந்தும், இந்தியாவில் இருந்தும் பலர் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.

இவர்கள் குழுக்களாக மோதல்களில் ஈடுபடுவது, தமிழ் சிறார்களை போதைப் பொருள்களுக்கு அடிமையாக்குதல், கடனட்டை மோசடிகளில் ஈடுபடுதல் போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு ரூற்றிங்கில் (Tooting) பிரபா என்ற இளைஞனைப் படுகொலை செய்த சிறீலங்காவைச் சேர்ந்த 6 இளைஞர்கள், இந்தியாவைச் சேர்ந்த மற்றொரு இளைஞருமாக 7 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களில் நால்வருக்கு ஆயுள் தண்டனையும், ஏனையோருக்கு பல வருடங்கள் சிறைத்தண்டனையும் பிரித்தானிய நீதிமன்றத்தினால் கடந்த மாதம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தது.

பிரித்தானிய ஊடகங்களும் உண்மையைக் கண்டறிந்து செய்தி வெளியிடும் ஊடக தருமத்தை மறந்து, நீதிமன்றங்களில் குற்றவாளிகள் கூறும் கருத்துக்களை அப்படியே வெளியிட்டு வருவதால், பிரித்தானிய தமிழ் சமூகத்தினர் இது பற்றி குறிப்பிட்ட ஊடகங்களின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments: