இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடனான சந்திப்பின் போது டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான வடமாகாண அபிவிருத்திக்கான விசேட செயலணிக் குழு தொடர்பான தனது எதிர்ப்பை தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
15வது சார்க் மாநாட்டிற்கு சென்றிருந்த இந்தியப் பிரதமரைச் சந்தித்து உரையாடிய போது தமிழர் விடுதலைக் கூட்டணித்தலைவர் ஆனந்த சங்கரி அரசாங்க அமைச்சர்களுடைய நடவடிக்கைகள் பற்றியும் கடுமையான விமர்சனத்தைத் தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆலோசனையின் பேரிலேயே இந்த விசேட பணிக்குழு உருவாக்கப்பட்டது. அது அத்தியாவசியமானதல்ல எனத் தெரிவித்ததோடு ஒரு இடைக்கால சபையால் வடக்கு மாகாண சபையை நிர்வகிக்க முடியும் எனவும் அவர் இந்தியப் பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.
டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஆயுதம் தாங்கிய ஈபிடிபி குழுவிடம் அதனை ஒப்படைப்பதானது, வடக்கு மக்களுக்குச் செய்யும் பேரழிவாகவே இருக்க முடியும் எனவும் குறிப்பிட்ட ஆனந்த சங்கரி, அது சட்டிக்குள் இருந்து நெருப்புக்குள் விழுந்த கதையாகி விடும் என்றும் தெரிவித்துள்ளார்.


No comments:
Post a Comment