இலங்கையும் பாகிஸ்தானும் தமக்கிடையில் பொருளாதார பங்குடமை ஒப்பந்தம் (சீபா) ஒன்றினைக் கைச்சாத்திடுவதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக இலங்கை வர்த்தகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
" இரு நாட்டு அதிகாரிகளும் சந்தித்து சீபா உடன்படிக்கையில் உள்ளடக்கப்படும் விடயங்கள் குறித்து ஆராய்ந்துள்ளார்கள். ஆனால் இந்த உடன்படிக்கை பின்னரே கைச்சாத்திடப்படவிருக்கிறது" என வர்த்தக திணைக்கள பதில் பணிப்பாளர் சமன் உடகெதர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாகிஸ்தானுடனான சீபா உடன்படிக்கை தொடர்பில் இலங்கையின் தனியார் துறையினருடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாகவும் வர்த்தக திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானில் இலங்கையின் வர்த்தகத் துறையினருக்கு உள்ள சந்தை வாய்ப்புகள் தொடர்பாகவும், இலங்கையில் பாகிஸ்தானுக்கு கிடைக்கக் கூடிய வர்த்தக ரீதியான நன்மைகள் தொடர்பாகவும் தனியார் துறையினருடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள வர்த்தக திணைக்கள பதில் பணிப்பாளர் சமன் உடகெதர, இருப்பினும் தனியார் துறையினர் இதில் போதிய அக்கறையை வெளிப்படுத்தவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இந்திய-இலங்கை பொருளாதார பங்குடமை ஒப்பந்தத்தினைக் கைச்சாத்திடுவது தொடர்பான பேச்சுக்கள் தொடர்ந்தும் நடைபெற்றுவருகின்ற நிலையில், பாகிஸ்தான் -இலங்கை பொருளாதார பங்குடமை ஒப்பந்தம் குறித்து தனியார் துறையினருடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடனான சீபா உடன்படிக்கை சார்க் மாநாடு நடைபெற்ற காலப்பகுதியில் கைச்சாத்திடத் திட்டமிட்டிருந்தபோதிலும், இலங்கையின் தனியார் துறையினர் மற்றும் சில அரசியல் கட்சியனரின் எதிர்ப்பின் காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment