இந்தியாவுடனான சீபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதில்லையென அரசு தீர்மானம் -முடிவை மாற்றுமாறு இந்திய அதிகாரிகள் கடும் அழுத்தம்
இந்தியாவுடன் செய்து கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த பரந்தளவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் (சீபா) அரசாங்கம் கையெழுத்திடாது என வெளிவிவகார அமைச்சின் உயர் மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, சீபா ஒப்பந்தத்தை கொழும்பில் நடைபெறும் சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு இந்திய பிரதமர் மன்மோகன் சிங் வருகை தரும்போது கைச்சாத்திடுவதென தீர்மானிக்கப்பட்டிருந்தது..
இந்நிலையில் அண்மையில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற பொருளாதார ஆலோசகர் குழு கூட்டத்தில் சீபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீபா ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு தாம் தயாராக இருப்பதாக இந்தியா இரு வாரங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை நேற்று சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கையின் முடிவு குறித்து தமது கடும் அதிருப்தியை தெரிவித்ததாகவும், இவ்வொப்பந்தத்தின் மூலம் இலங்கைக்கு கிடைக்கும் நன்மைகளை விளக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை இலங்கையின் இந்த முடிவால் இந்தியா மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளதாக இந்தியாவின் சிரேஷ்ட இராஜதந்திரியொருவர் தெரிவித்தார். இதே வேளை சீபா ஒப்பந்தத்தில் இலங்கையை கையெழுத்திடச் செய்வதற்கு இந்திய அதிகாரிகள் இலங்கைத் தலைவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்..
இது தொடர்பில் அதிகாரிகள் மட்டத்திலும் வெளிவிவகார அமைச்சு மட்டத்திலும் இந்தியா கடும் அழுத்தங்களை கொடுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். எனினும் சீபா ஒப்பந்தத்தினால் இலங்øக்கு எவ்விதமான பொருளாதார அனுகூலமும் ஏற்படப்போவதில்லையெனவும், மாறாக உள்நாட்டு கைத்தொழில்கள் நலிவடைவதற்கே இது வழிவகுக்குமென பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-வீரகேசரி
Friday, 1 August 2008
இந்தியாவுடனான சீபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதில்லையென அரசு தீர்மானம் -முடிவை மாற்றுமாறு இந்திய அதிகாரிகள் கடும் அழுத்தம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment