ஈழ விடுதலைக்காக சிறிலங்கா அரசுக்கு எதிராக எத்தனையோ இயக்கங்கள் எழுந்து விழுந்துவிட்டன. ஓயாத அலைகளாக இன்றுவரை உலக அரங்கத்தில் உறுமிக்கொண்டு இருக்கிற ஒரே அமைப்பு- "தமிழீழ விடுதலைப் புலிகள்" என்றும் ஏங்கிக் கிடக்கும் ஈழ மக்களின் ஒரே நம்பிக்கையும் புலிகள்தான் என்றும் தமிழ்நாட்டின் முன்னணி வார ஏடான "ஆனந்த விகடன்" புகழாரம் சூட்டியுள்ளது. |
தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக ஆனந்த விகடன் இதழானது (06.08.08 பதிப்பு) "கருத்துக்கணிப்பு" ஒன்றை வெளியிட்டு பிரசுரித்துள்ள கட்டுரை: ஜூலை 25, 1983..! இலங்கையில் இனவெறிக்கான வெறுப்பு விதை அழுத்தமாக விழுந்த நாள். சிங்கள இராணுவம் முதல்முறையாக ஈழத் தமிழ்ப் பகுதிகளில் வெறிபிடித்து வேட்டையாடி, அப்பாவித் தமிழர் பிணங்களை அடுக்கிய நாள். தனித் தமிழீழப் போராட்டத்துக்கு உணர்ச்சி நெருப்பேற்றிய அந்தக் கறுப்பு ஜூலை முடிந்து 25 வருடங்களாகின்றன! அரை நூற்றாண்டு காலமாக போரின் இரத்தத்தில் நனைகிறது ஈழ மண். நிலம், குடும்பம், உயிர், உடைமை என எல்லாவற்றையும் இழந்து துயரத்தின் பிள்ளைகளாக வாழ்கிறார்கள் ஈழத் தமிழர்கள். ஈழ விடுதலைக்காக, சிறிலங்கா அரசுக்கு எதிராக எத்தனையோ இயக்கங்கள் எழுந்து விழுந்துவிட்டன. ஓயாத அலைகளாக இன்று வரை உலக அரங்கத்தில் உறுமிக்கொண்டு இருக்கிற ஒரே அமைப்பு, 'தமிழீழ விடுதலைப் புலிகள்'! அனைத்துலக தீவிரவாத அமைப்புக்களின் பட்டியலில் ஒன்றாக இருந்தாலும், உலகில் வேறு எந்த இயக்கத்துக்கும் இல்லாத கண்ணிய மரியாதை விடுதலைப் புலிகளுக்கு உண்டு. உலக நாடுகளின் துணையோடு எதிர்க்கிற சிறிலங்கா இராணுவத்துக்கு, புலிகள் ஒவ்வொரு கணமும் சிம்ம சொப்பனம்தான்! "இராணுவத்திலிருந்து தப்பி ஓடியவர்களை மீளச்செய்யும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளோம். புலிகளை வீழ்த்த இன்னும் 10 ஆயிரம் வீரர்கள் உடனடியாகத் தேவைப்படுகிறார்கள்!" என்று அறிவிக்கிறது சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சகம். அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் பாரக் ஒபாமா உலகின் மற்ற தீவிரவாத அமைப்புகளைக் கண்டிக்கிறார். ஆனால், புலிகள் பற்றிய கேள்விகளுக்கு அவரது பதில் மௌனம்தான். "செல்லடிக்கிற இரவுகளும் எங்கட பெண்டு பிள்ளைகளைக் கைபிடிச்சு இழுக்கிற ஆமிக்காரர்களும் இல்லாத எங்கட மண் வேண்டும்" என ஏங்கிக்கிடக்கும் ஈழ மக்களின் ஒரே நம்பிக்கையும் புலிகள்தான்! ஆனால், புலிகள் அமைப்பு பலவீனமடைந்துவிட்டது, அமைப்புக்குள்ளேயும் உலக நாடுகளின் பார்வையிலும் அது பின்னடைவில் இருக்கிறது என்பது மாதிரியான தோற்றம் இப்போது ஏற்பட்டிருப்பது உண்மையா..? அன்டன் பாலசிங்கம், சுப.தமிழ்ச்செல்வன் போன்ற முக்கிய தளகர்த்தர்களின் மறைவு அவர்களுக்கு மறுக்க முடியாத இழப்புதான். ஆனால், "விடுதலைப் புலிகளுக்கு இழப்புகள் புதிதல்ல. திலீபன் தொடங்கி தமிழ்ச்செல்வன் வரை அவர்கள் இழப்புக்களில்தான் எழுந்து முளைத்திருக்கிறார்கள். 25 வருட போராட்டக்களத்தில் புலிகள் கண்ட இழப்புக்கள் நிகழ்காலச் சரித்திரத்தில் எந்த போராளிக்குழுக்களும் காணாதது. அவர்களை எதுவும் தடுக்க முடியாது" என்கிறார்கள் அனைத்துலக பார்வையாளர்கள். புலிகளின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் பகுதிகளில் சிங்கள இராணுவம் முன்னேறி வருகிறது என சிறிலங்கா அமைச்சகம் வெளியிடும் செய்திகளில் எத்தனை உண்மை என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்தச் சூழலில் இலங்கையில் நடக்கும் சார்க் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்வதை அடுத்து தற்காலிகப் போர் நிறுத்தம் அறிவித்திருக்கிறார்கள் புலிகள். இந்த நேரத்தில் எல்லோருக்குள்ளும் எழுகிற கேள்விகள்... இலங்கை தமிழர் பிரச்னையில் இந்திய அரசின் நிலைப்பாடு சரிதானா? புலிகளின் போராட்டத்துக்குத் தமிழர்களிடையே ஆதரவு இருக்கிறதா..? தமிழீழம் அவசியமா? ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பிரபாகரனுக்குத் தண்டனை கொடுக்க வேண்டுமா? "ஒற்றைத் துப்பாக்கி, ஐந்து வீரர்களோடு பிரபாகரன் தொடக்கிய அமைப்பு, இன்று 25 ஆயிரம் வீரர்கள் கொண்ட மாபெரும் இயக்கம்! தரைப் புலிகள், கடற்புலிகள், வான் புலிகள் என சகல திசைகளிலும் கிளை பரப்பும் புலிகளின் இராணுவக் கட்டமைப்பு அசாத்தியக் கச்சிதமானது. இதுவரை புலிகள் தற்காப்பு நிலையில்தான் போரிட்டார்கள். அவர்கள் தாக்குதல் நிலையை எடுக்கும்போது சிங்கள இராணுவம் பெரும் வீழ்ச்சியைச் சந்திக்கும். அந்தத் தருணத்துக்காகத்தான் புலிகள் காத்திருக்கிறார்கள்!" என்கிறார் ஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தன் நம்பிக்கையாக! புலிகளின் நிரந்தர ஆதரவாளரான தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன், "போர் தந்திரங்களின்படி சில இடங்களில் முன்னேறி, சில இடங்களில் பின்வாங்கினாலும் புலிகள் தங்கள் இலக்கை நோக்கி முன்னேறிக்கொண்டே இருக்கிறார்கள். உலக நாடுகளிடமிருந்து ஆயுத உதவி பெறும் சிங்கள இராணுவத்திடம் பறித்தெடுத்த ஆயுதங்களைக்கொண்டே இத்தனை காலமும் வளமான போராட்டம் நடத்தி வருகிறார்கள் புலிகள்!" என்கிறார். "தமிழீழப் போராளிகளின் ஆயுதம் தாங்கிய போராட்டம் அறிவியல்பூர்வமாகவும் இராணுவ ரீதியாகவும் பெரும் வெற்றியைச் சந்தித்திருக்கிறது. அனைத்துலக அளவில் தமிழீழம் அங்கீகரிக்கப்படவில்லையே தவிர, இலங்கையில் தமிழீழத்தை மனதளவில் ஏற்றுக்கொண்டார்கள் என்பதே உண்மை. தமிழீழத்துக்கான அரசாங்கம் அமைக்கப்பட்டு, நீதி, காவல், கல்வி, மருத்துவம், நிதி என அனைத்துத்துறைகளும் சிறப்பாக இயங்கி வருகின்றன. சிறிலங்கா சார்க் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்வதை ஒட்டி, புலிகள் அறிவித்திருக்கும் போர் நிறுத்தம் புலிகளின் நேர்மையை உலகுக்குக் காட்டுவதாக இருக்கிறது!" என்று பெருமிதப்படுகிறார் தொல்.திருமாவளவன். |
Friday, 1 August 2008
ஏங்கும் ஈழ மக்களின் ஒரே நம்பிக்கையாக- ஓயாத அலைகளாக- இன்றும் உறுமுகிற ஒரே அமைப்பு "விடுதலைப் புலிகளே": "ஆனந்த விகடன்" புகழாரம்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
i am proud i voted in favour of tamil tigers!
Post a Comment