தெற்காசிய நாடுகளில் இலங்கையே, மனித உரிமை மீறல்களில் முதலிடம் வகிப்பதாக நேற்று வெள்ளிக்கிழமை ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட 2008 ஆம் ஆண்டிற்கான தெற்காசிய மனித உரிமைகள் சுட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எல்லா தெற்காசிய நாடுகளும் மனித உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பில் குறைவான அடைவுகளே வெளிப்படுத்தியுள்ளதாகவும் அந்த சுட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், தெற்காசிய நாடுகளில் மாலைதீவு மனித உரிமைகளைப் பேணுவதில் குறிப்பிடத்தக்க அடைவை வெளிப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ள இந்தச் சுட்டி, அதற்கடுத்ததாக இந்தியா, நோபாள் ஆகிய நாடுகள் மனித உரிமைகளைப் பேணுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
எல்லா தெற்காசிய நாடுகளும் மனித உரிமைகளைப் பேணுவதில் குறைவான அடைவுகளையே வெளிப்படுத்தியுள்ள நிலையில், தற்பொழுது நடைபெறுகின்ற 15வது சார்க் மாநாட்டில் மனித உரிமைகளைப் பேணுவதற்கான செயற்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட வேண்டும் எனவும்,
குறிப்பாக சிவில் சமூகத்தின் பங்களிப்புடன் தெற்காசிய மனித உரிமைகள் சாசனம் ஒன்றை வரைவதற்கான சாத்தியமான முன்னெடுப்புகளை சார்க் மேற்கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள்விடுக்கப்பட்டுள்ளது.
ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புள்ளிவழங்கும் திட்டத்திற்கமைய, இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பாக 52 புள்ளிகளைப் பெற்றுள்ளதாகவும், அதற்கடுத்து பங்களாதேஷ் 45, பூட்டான் 43, பாகிஸ்தான் 41 எனும் ஒழுங்கில் புள்ளிகளைப் பெற்றுள்ளதாகவும் இந்த சுட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலைதீவு 23 புள்ளிகளையும், நேபாள், இந்தியா என்பன 24 புள்ளிகளையும் பெற்றுள்ளன.
ஊடக சுதந்திரத்தைப் பொறுத்தவரை பூட்டான் மோசமான அடைவை வெளிப்படுத்தியுள்ளதாகவும், அதற்கடுத்ததாக இலங்கையிலேயே ஊடக சுதந்திரம் இல்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாழ்வதற்கான உரிமை, சிறுவர்களின் உரிமை, மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல்கள், சிறுபான்மையினருக்கு எதிரான உரிமை மீறல்கள் என்பவற்றில் இலங்கை மிக மோசமான வன்முறைகள் நிகழும் நாடாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேர்மையற்ற விதத்தில் யுத்தம் முன்கொண்டுசெல்லப்படுவதாகக் குறிப்பிட்டுள்ள ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, தமிழர்கள் கொழும்புக்கு பயணம் செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமையானது அரசாங்கத்தின் நோக்கத்தினை தெளிவாகக் காட்டுவதாகவும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment