Friday, 1 August 2008

களமுனையில் புலிகளின் மௌனம் குறித்து இராணுவம் எச்சரிக்கை: 'மிறர்' பாதுகாப்பு ஆய்வாளர்

ஏ-9 வீதியின் கிழக்காகவும், மேற்காகவும் பெருமளவு பகுதிகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள இலங்கை இராணுவத்தினர், விடுதலைப் புலிகள் இதுவரையில் பாரிய தாக்குதல் எதனையும் மேற்கொள்ளாது மௌனமாக இருந்துவருவது குறித்து எச்சரிக்கையாக இருப்பதாக டெய்லி மிறர் பத்திரிகையின் பாதுகாப்பு ஆய்வாளர் சுனில் ஜயசேகர தனது வாராந்த பாதுகாப்பு ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் இலங்கைப் படையினரின் துரித முன்னேற்றம் மற்றும் தமது பிரதான தளங்களிலிருந்தும் புலிகள் பெரியளவில் பின்வாங்கியுள்ளமை என்பன, அடுத்த கட்ட நகர்வுக்கான புலிகளின் இரகசிய நோக்கங்களை வெளிப்படுத்தவதாக இராணுவப் புலனாய்வுத்துறை எச்சரித்திருப்பதாகவும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

4ஆவது ஈழப்போர் ஆரம்பாகி இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில் புலிகளை தோற்கடிக்கலாம் என்ற நம்பிக்கை இலங்கைப் படையினருக்கு ஏற்பட்டுள்ளபோதும், விடுதலைப் புலிகளின் தலைமையின் தொடர்ச்சியான மௌனம், அடுத்து வரும் மாதங்களில் ஏதேனும் எதிர்பாராத விடயங்கள் இடம்பெறலாம் என்ற ஐயப்பாட்டைத் தோற்றுவித்திருப்பதாகக் குறிப்பிடும் மிறர் பாதுகாப்பு ஆய்வாளர் ஜயசிறி,

கடந்த காலங்களிலும் இவ்வாறு படையினரின் முன்னேற்ற நடவடிக்கைகளின்போது தந்திரோபாய ரீதியாக தமது தளங்களிலிருந்து பின்வாங்கி, இராணுவத்தினருக்கு அதிகம் பரிச்சயமில்லாத பகுதிகளுக்குள் அவர்களை இழுத்து, வாய்ப்பான ஒரு தருணத்தில் மீண்டும் தாக்குதல் நடத்தி, இழந்த பிரதேசங்களையும் கைப்பற்றி, படையினருக்குப் புலிகள் பலத்த இழப்புக்களையும் ஏற்படுத்தியிருப்பதை தனது பத்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், புலிகள் தமது படைப்பலத்தின் மூன்றில் இரண்டு பகுதியை இதுவரையில் இழந்திருப்பதாகக் குறிப்பிடும் அவர், படையினர் மீது பாரிய தாக்குதல் எதனையும் மேற்கொள்வதற்கான ஆள் மற்றும் படைக்கல வளங்கல் புலிகளிடம் இப்போது கிடையாது என்றும் விபரித்துள்ளார்.

யாழ்ப்பாண தரையிறக்கச் சாத்தியம்

யாழ்ப்பாணத்தை மீண்டும் கைப்பற்றும் தமது நோக்கத்தை புலிகள் இன்னமும் கைவிடவில்லை என்பதால், யாழ் குடாநாட்டில் இன்னமும் புலிகளின் வசம் இருக்கும் நாகர்கோவில் பகுதியூடாக ஒரு எதிர்பாராத தரையிறக்கத்தை மேற்கொண்டு யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் நடவடிக்கையைப் புலிகள் மேற்கொள்ளலாம் என்று இராணுவப் புலனாய்வாளர்கள் எச்சரித்திருப்பதாக மிறர் பாதுகாப்பு ஆய்வு குறிப்பிடுகிறது.

அல்லது, கிளிநொச்சி மாவட்டத்துக்குள் படையினர் நுழைந்ததும், 57வது படையணியை இலக்குவைத்து, அவர்கள் மீது பாரிய தாக்குதல் ஒன்றை நடத்துவதற்காக புலிகள் தற்போது மௌனம் காத்திருக்கக் கூடும் என்றும் அந்த ஆய்வில் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

எனினும், தொடர்ச்சியான வெற்றிகள் மூலம் கிடைத்த அதிகபட்ச மனவுறுதியுடன் படையினர் இருப்பதால் இது அவ்வளவுதூரம் சாத்தியமில்லை என்றும் ஜயசிறி வாதிடுகிறார்.

கிளிநொச்சி மாவட்டத்துக்குள் இந்தப் படையணி நுழைந்துவிட்டால், 2000, ஏப்ரல் 22இல் ஆனையிறவு படைத்தளத்திலிருந்து பின்வாங்கிய எட்டு வருடங்களின் பின்னர், முதற் தடவையாக மீண்டும் கிளிநொச்சி மாவட்டத்துக்குள் படையினர் பிரவேசிப்பர் என்றும் இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, முல்லைத்தீவை ஆறு அணிகள் முற்றுகையிடும்

ஏ-9 வீதியின் மேற்குப் பகுதியை இராணுவம் கைப்பற்றிவிட்டால் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை இராணுவத்தினரின் ஆறு அணிகள் முற்றுகையிடும் என்று விபரித்துள்ள சுனில் ஜயசிறி, இதனால், புலிகளின் தாக்குதல் அச்சம் பெருமளவில் குறைந்துவிடும் என்றும் வாதிடுகிறார்.

அடுத்த சில மாதங்கள் இரு பகுதியினருக்குமே மிகவும் முக்கியமான காலகட்டமாக இருக்கும் என்றும் அவர் தனது ஆய்வில் குறிப்பிடுகிறார்.

களமுனையிலிருக்கும் படையினரின் தகவல்படி, சேதங்களைக் குறைத்துக்கொள்வதற்காக புதிதாகக் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களிலிருந்து பின்வாங்குவதற்கு படையினர் தயாராக இருப்பதாகவும், நிலங்களைக் கைப்பற்றுவதைவிட, பிரதேசங்களை விடுவிப்பதே படையினரது பிரதான நோக்கமாக இருக்கிறது எனறும் தனது ஆய்வில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பொறிக்குள் சிக்கிய 25,000 பொதுமக்கள்

மாங்குளம்-துணுக்காய்-பூநகரி வீதியை படையினர் இப்போது துண்டித்திருப்பதால், வவுனிக்குளம் பிரதேசத்தில் சுமார் 25,000 பொதுமக்கள் கிளிநொச்சி மாவட்டத்தை நோக்கி இடம்பெயர முடியாமல் சிக்குண்டிருப்பதாகவும் இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

போக்கிடம் இல்லாத காரணத்தினால் இந்த மக்கள் வீதியோரங்களில் தஞ்சம் புகுந்திருப்பதாகவும் டெய்லி மிறர் பாதுகாப்பு ஆய்வாளர் சுனில் ஜயசிறி தனது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.

No comments: