Tuesday, 10 June 2008

2007ல் பாரிய மோதல்கள் இடம்பெற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை

2007ஆம் ஆண்டு பாரிய மோதல்கள் இடம்பெற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை உட்படுத்தப்பட்டுள்ளது. சுவீடனைத் தளமாகக்கொண்டியங்கும் சமாதான ஆய்வு நிறுவனம் இந்தக் கணிப்பீட்டை நடத்தியுள்ளது.

2007ஆம் ஆண்டு உலகத்தில் 14 பாரிய மோதல்கள் இடம்பெற்றுள்ளன என்று சுவீடனைத் தளமாகக்கொண்டியங்கும் ஸ்டொக்கோல்ம் சர்வதேச சமாதான ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. 2007ஆம் ஆண்டில் இலங்கை, ஆப்கானிஸ்தான், மியன்மார் மற்றும் துருக்கிய ஆகிய நாடுகளில் மோதல்கள் அதிகரித்திருப்பதாக அந்த நிறுவனம் கூறுகிறது.


2007ஆம் ஆண்டு உலகத்தின் பாதுகாப்புச் செலவீனத்தில் அரைப் பகுதியை அமெரிக்கா செலவுசெய்திருப்பதாகவும், உலகளாவிய ரீதியில் ஆயுத விற்பனைகள் அதிகரித்திருப்பதாகவும் ஸ்டொக்கோல்ம் சர்வதேச சமாதான ஆய்வு நிறுவனத்தின் வருடாந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


கடந்த வருடம் உலகத்தின் மொத்த இராணுவச் செலவீனம் 1.339 ரில்லியன் டொலர்கள் அல்லது 202 டொலர் தலாவருமானம் எனக் கணிப்பிடப்பட்டிருப்பதுடன், இந்தத் தொகையானது 2006ஆம் ஆண்டைவிட கடந்த வருடம் 6 வீதம் அதிகரிப்பு ஏன அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2007ஆம் ஆண்டு உலகத்தின் இராணுவச் செலவீனத்தில் 45 வீதம் அல்லது 547 பில்லியன் டொலர் அமெரிக்காவால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரண்டாவது உலகப் பேரின் பின்னர் அமெரிக்காவால் செலவுசெய்யப்பட்ட கூடுதலான பாதுகாப்புச் செலவீனம் இதுவெனவும், பிரித்தானியா, சீனா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அடுத்து கூடுதல் இராணுவச் செலவீனங்களைச் செய்த நாடுகள் எனவும் அந்த நிறுவனத்தின் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


1998ஆம் ஆண்டைவிட கடந்த ஆண்டு மத்திய ஆசிய, தெற்காசிய, கிழக்காசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளின் இராணுவச் செலவீனம் 50 வீதத்தால் அதிகரித்துள்ளது. உலகத்தின் முக்கிய 100 இராணுவ உற்பத்தி நிறுவனங்களால் ஆயுதங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இது 2006ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 5 வீத அதிகரிப்பு என்பதுடன், பெறுமதி 315 பில்லியன் அமெரிக்க டொலர் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. இந்த 100 ஆயுத உற்பத்தி நிறுவனங்களில் 41 அமெரிக்காவைத் தளமாகக் கொண்டவை.

2003-2007ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமெரிக்காவும், ரஷ்யாவும் உலகத்திலேயே முக்கிய இராணுவத் தளபாட ஏற்றுமதியாளர்கள் எனவும் சுவீடனைத் தளமாகக்கொண்டியங்கும் ஸ்டொக்கோல்ம் சர்வதேச சமாதான ஆய்வு நிறுவனத்தின் வருடாந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: