எகிப்திலுள்ள 'விலோசிற்றி' எனும் பிரபல ஆடைத் தொழிற்சாலையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள இலங்கைத் தொழிலாளர்களுக்கெதிராக அந்நாட்டு அதிகாரிகள் எடுக்கும் எந்த நடவடிக்கைகளுக்கும் தாம் பொறுப்பேற்க முடியாது என இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இப்பெண்கள் சம்பள உயர்வு மற்றும் மேலதிக வேலை நேரக்கொடுப்பனவின் அதிகரிப்பை வலியுறுத்தி அத்தொழிற்சாலைக்கு எதிராக மே 24 ஆம் திகதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்திவருவதாகக் குறிப்பிட்டுள்ள பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க, இதன் காரணமாக இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இலங்கைக்கு வழங்கப்படக் கூடிய ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளுக்கு இதனால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வேலை நிறுத்தத்தில் குதித்துள்ள 142 இலங்கைப் பெண்கள் நாடு கடத்தப்படும் நிலையை எதிர்நோக்கியுள்ளதாகவும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
எகிப்தின் தொழில் தொடர்பான சட்ட விதிகளின் கீழ் அங்குள்ள தொழில் நிறுவனம் ஒன்றுக்கு எதிராக எதுவித போராட்டமும் நடத்த முடியாது என்றும் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இது தெடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அந்த தொழிற்சாலை நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது. அதன்படி இப்பெண்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக தொழிற்சாலை நிர்வாகம் உறுதியளித்துள்ளது. ஆனால், நிர்வாகத்தின் உறுதிமொழியில் தமக்கு நம்பிக்கையில்லை எனக்கூறி இவர்கள் போராட்டத்தை தொடர்ந்தும் நடத்திவருகின்றனர்.
இதனால் இப்போராட்டத்தைக் கைவிட்டு மீண்டும் வேலைக்கு திரும்பாவிடில் இவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பப்போவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
இந்த சட்டத்தையும் மீறி இவர்கள் வேலை நிறுத்தம் செய்து வருவது அந்நாட்டின் சட்ட விதிகளை மீறும் குற்றமாகும். எகிப்திலுள்ள இந்த ஆடைத் தொழிற்சாலையில் 2700 வெளிநாட்டவர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் 200 பேர் இலங்கையர்கள். இதில் 142 பெண்களே இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment